தேனியில் சிக்கலில் இருந்த சிக்னலுக்கு மூடுவிழா: நவீன வசதிகளுடன் புதிய போக்குவரத்து சிக்னல் இன்று பயன்பாட்டுக்கு வருகிறது


தேனியில் சிக்கலில் இருந்த சிக்னலுக்கு மூடுவிழா: நவீன வசதிகளுடன் புதிய போக்குவரத்து சிக்னல் இன்று பயன்பாட்டுக்கு வருகிறது
x
தினத்தந்தி 22 Oct 2020 2:53 PM IST (Updated: 22 Oct 2020 2:53 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் மழை வந்தாலே பழுதாகி சிக்கலில் மாட்டிக்கொண்டு இருந்த சிக்னல் அகற்றப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. அது இன்று (வியாழக்கிழமை) பயன்பாட்டுக்கு வருகிறது.

தேனி,

தேனி நகரில் முக்கூட்டு சாலை என்று அழைக்கப்படும் நேரு சிலை சிக்னல் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ளது. மதுரை சாலை, பெரியகுளம் சாலை, கம்பம் சாலை ஆகிய பிரதான மூன்று சாலைகளும் சந்திக்கும் இடமாகவும், பழைய பஸ் நிலைய, வாரச்சந்தைக்கு அருகிலும் அமைந்துள்ளதால் எப்போதும் நெரிசல் மிகுந்த பகுதியாக இந்த சிக்னல் பகுதி திகழ்கிறது.

இங்கு அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி பழுதாகி வந்தது. மழைக்காலம் என்றால் சிக்னல் பல நாட்கள் செயலிழப்பதும் வாடிக்கையாக இருந்தது. இந்த சிக்னலை புதுப்பிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், சிக்கலில் சிக்கிக்கொண்டு இருந்த சிக்னலுக்கு தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. பழைய சிக்னல் அகற்றப்பட்டு நவீன வசதிகளுடன் தற்போது புதிய சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ளது போன்று நவீன சிக்னலாக இது அமைந்துள்ளது. சிக்னல் விழும் நேரத்தை வினாடிகளில் தெரிவிக்கும் வகையிலான டிஜிட்டல் திரையுடன் இந்த சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன், சிவப்பு, மஞ்சள், பச்சை நிற விளக்குகள் எரியும் போது சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளில் மட்டும் இன்றி சிக்னல் கம்பம் முழுவதும் ஒளிரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதுபோல், மதுரை சாலையில் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியிலும், பெரியகுளம் சாலையில் அன்னஞ்சி விலக்கு பகுதியிலும் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து இந்த சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சிக்னல் நேரத்தை காட்டும் டிஜிட்டல் திரை பல மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது. அதே நேரத்தில், சிக்னல் கம்பம் முழுவதும் ஒளிரும் வகையிலான அமைப்பு சென்னையில் தான் உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் இந்த நவீன வசதியுடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இந்த சிக்னல் பயன்பாட்டுக்கு வருகிறது“ என்றார்.

Next Story