மாவட்ட செய்திகள்

தீபாவளியையொட்டி வசூல் வேட்டை: திண்டுக்கல் அதிகாரி வீடுகளில் சோதனை; 100 பவுன் நகை, ரூ.4 லட்சம் சிக்கியது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை + "||" + On the occasion of Deepavali Collection hunt Dindigul officer raids homes 100 pound jewelry, Rs 4 lakh was involved

தீபாவளியையொட்டி வசூல் வேட்டை: திண்டுக்கல் அதிகாரி வீடுகளில் சோதனை; 100 பவுன் நகை, ரூ.4 லட்சம் சிக்கியது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை

தீபாவளியையொட்டி வசூல் வேட்டை: திண்டுக்கல் அதிகாரி வீடுகளில் சோதனை; 100 பவுன் நகை, ரூ.4 லட்சம் சிக்கியது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
தீபாவளியையொட்டி வசூல் வேட்டை நடந்த திண்டுக்கல் கனிம வளத்துறை துணை இயக்குனரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 100 பவுன் நகை, ரூ.4 லட்சம் சிக்கியது.
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் 2-வது தளத்தில் கனிம வளத்துறை துணை இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு துணை இயக்குனராக பெருமாள் பணியாற்றுகிறார். இந்த அலுவலகத்தில் தீபாவளி வசூல்வேட்டை நடப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை, கனிமவளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.


அப்போது போலீசாரை கண்டதும் சிலர் ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வெளியே வீசினர். அவ்வாறு வெளியே வீசிய பணத்தை கைப்பற்றிய போலீசார், அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில் ரூ.1 லட்சத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக கனிம வளத்துறை துணை இயக்குனர் பெருமாள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் துணை இயக்குனர் பெருமாளின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி கவுண்டர்நகர் ஆகும். ஆனால் அவர் திண்டுக்கல்லில் பணியாற்றுவதால் திண்டுக்கல் ராஜீவ்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். எனவே, துணை இயக்குனர் பெருமாளை, ராஜீவ்நகரில் இருக்கும் வீட்டுக்கு அதிகாலை 2.30 மணிக்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அந்த வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு காலை 5.30 மணி வரை சோதனை நடைபெற்றது. அனைத்து அறைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் போலீசாரிடம் சிக்கியது. அதுகுறித்து துணை இயக்குனர் பெருமாளிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த பணம் கணக்கில் வராதது என்பது தெரியவந்தது. இதனால் அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கனிம வளத்துறை துணை இயக்குனர் பெருமாள் மற்றும் அலுவலக ஊழியர் செல்வமணி ஆகியோர் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே கனிம வளத்துறை துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் வீட்டில் பணம் சிக்கியது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, அவருடைய சொந்த ஊரில் இருக்கும் வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

அதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார் நேற்று மதியம் 2 கார்களில் பவானி கவுண்டர்நகருக்கு விரைந்தனர். அப்போது பெருமாளின் வீட்டில் அவருடைய மனைவி எழிலரசி இருந்தார். இதைத் தொடர்ந்து பெருமாளின் வீட்டில் அதிரடியாக நுழைந்து போலீசார் சோதனை நடத்தினர்.

வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சல்லடை போட்டு போலீசார் சோதனையிட்டனர். மேலும் அந்த அறைகளில் இருந்த பீரோக்கள், பாதுகாப்பு பெட்டகங்களை திறந்து சோதனை செய்தனர். இந்த சோதனை சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது. வீடு முழுவதும் நடத்திய சோதனையில் 100 பவுன் நகைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அந்த நகைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதுதொடர்பாக பெருமாளின் மனைவி எழிலரசியிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் நீண்டநேரம் விசாரணை நடத்தினர். பின்னர் பறிமுதல் செய்த நகைகளை போலீசார் கொண்டு சென்றனர். திண்டுக்கல் கனிம வளத்துறை துணை இயக்குனரின் திண்டுக்கல், பவானி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெருமாளின் மனைவி எழிலரசி பவானி அருகே உள்ள தளவாய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தின் ஆசிரியை ஆவார்.