‘எனது பெயரை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள்’ ஏக்நாத் கட்சேவுக்கு அஞ்சலி தமானியா எச்சரிக்கை


‘எனது பெயரை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள்’ ஏக்நாத் கட்சேவுக்கு அஞ்சலி தமானியா எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2020 10:14 PM GMT (Updated: 2020-10-23T03:44:03+05:30)

‘உங்கள் எதிரிகளுடனான அரசியல் பகையை தீர்த்து கொள்ள, எனது பெயரை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள்’ என ஏக்நாத் கட்சேவுக்கு அஞ்சலி தமானியா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மும்பை, 

பா.ஜனதாவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைய உள்ளார். இவர் ஜல்காவ் மாவட்டம் முக்தாய் நகரில் சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் கடந்த 2017-ம் ஆண்டு வக்கோலா போலீசில் மானபங்க புகார் அளித்தார். இந்த புகார் குறித்து அப்போதைய முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வழக்குப்பதிவு செய்ய போலீசாரை அறிவுறுத்தியதாக ஏக்நாத் கட்சே குற்றம்சாட்டி இருந்தார்.

அஞ்சலி தமானியா எச்சரிக்கை

இது குறித்து அஞ்சலி தமானியா கூறியிருப்பதாவது:-

எனது போராட்டம் ஊழலுக்கு எதிரானது. நான் எந்த அரசியல் தலைவரின் கை கூலியும் இல்லை. எதிரிகளுக்கு எதிரான அரசியல் பகையை தீர்க்க எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என ஏக்நாத் கட்சேவை எச்சரிக்கிறேன். அவருக்கு பாடம் கற்பிக்கும் பலத்துடன் நான் உள்ளேன். அவர் என்னை பற்றி அவதூறாக பேசினார். எனவே அவர் மீது போலீசில் புகார் அளித்தேன்.

பின்னர் இந்த வழக்கு முக்தாய் நகர் போலீசுக்கு மாற்றப்பட்டது. எனது வாக்குமூலத்தை பதிவு செய்ய அங்குள்ள போலீஸ் நிலையம், மாஜிஸ்திரேட்டு அலுவலகம் சென்றேன். ஆனால் அப்போது முதல்-மந்திரியாக இருந்த தேவேந்திர பட்னாவிசின் அழுக்கு அரசியல் காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் தேவேந்திர பட்னாவிசுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஞ்சலி தமானியாவின் எச்சரிக்கை குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) பதில் அளிப்பதாக ஏக்நாத் கட்சே கூறியுள்ளார்.

Next Story