போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மந்திரி யசோமதி தாக்கூரின் தண்டனை நிறுத்தி வைப்பு ஐகோர்ட்டு உத்தரவு


போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மந்திரி யசோமதி தாக்கூரின் தண்டனை நிறுத்தி வைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Oct 2020 3:54 AM IST (Updated: 23 Oct 2020 3:54 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மராட்டிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி யசோமதி தாக்கூருக்கு செசன்ஸ் கோர்ட்டு விதித்த 3 மாதம் கடுங்காவல் தண்டனையை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

மும்பை, 

மராட்டிய மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யசோமதி தாக்கூர். இவர் கடந்த 2012-ம் ஆண்டில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அமராவதி மாவட்டம் சுன்னாப்பட்டி பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து விதியை மீறி ஒருவழிப்பாதை வழியாக காரில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், அவரது காரை தடுத்து நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த யசோமதி தாக்கூர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் போலீஸ்காரரை தாக்கியதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ராஜாபேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

3 மாதம் கடுங்காவல்

இந்த வழக்கை விசாரித்த அமராவதி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு கடந்த 15-ந் தேதி தீர்ப்பு கூறியது. அப்போது மந்திரி யசோமதி தாக்கூர் மற்றும் அவரது கார் டிரைவர், 2 ஆதரவாளர்களுக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.15 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து மந்திரி யசோமதி தாக்கூர் ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி வினய் ஜோஷி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நிறுத்தி வைப்பு

அப்போது மந்திரியின் வக்கீல் வாதிடுகையில், வெறும் சாட்சியங்களை மட்டுமே ஆய்வுசெய்து தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய செசன்சு கோர்ட்டு தவறு செய்து உள்ளது. இது தண்டனைக்குரிய வழக்கு அல்ல. எனவே ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை முடிவடையும் வரை, கீழ்கோர்ட்டு விதித்த தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதை அடுத்து மந்திரி யோசமதி தாக்கூருக்கு கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி வினய் ஜோஷி உத்தரவிட்டார். மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Next Story