ஆலங்குளம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


ஆலங்குளம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 Oct 2020 11:48 PM GMT (Updated: 2020-10-23T05:18:24+05:30)

ஆலங்குளம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நெல்லை, 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்தவர் கைலாசம் மகன் சிவன் பெருமாள் (வயது 34). கூலி தொழிலாளியான இவர் கடந்த 11-7-2017 அன்று அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 2-வது திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், அம்பை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிவன் பெருமாளை கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிவன் பெருமாளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து சிவன் பெருமாளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெப ஜீவா ஆஜராகி வாதாடினார்.

Next Story