வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து வீடு, வீடாக சென்று விளக்க வேண்டும் தி.மு.க.துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு


வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து வீடு, வீடாக சென்று விளக்க வேண்டும் தி.மு.க.துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 23 Oct 2020 12:08 PM GMT (Updated: 2020-10-23T17:38:15+05:30)

வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் விளக்கி கூற வேண்டும் என்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. பேசினார்.

விழுப்புரம்,

தி.மு.க. விவசாய அணியின் மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில செயலாளர்கள் விஜயன், சின்னசாமி, பொன்.கவுதமசிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மஸ்தான், சீத்தாபதி சொக்கலிங்கம், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாநில துணை செயலாளர் அன்னியூர் சிவா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற 3 வேளாண் சட்டங்களால் இனி விவசாய விளைபொருட்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும். அவர்கள் சொன்ன விலைக்குத்தான் விற்பனை செய்ய முடியும் என்ற நிலையை இந்த புதிய சட்டங்கள் ஏற்படுத்தும். எனவேதான் இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி முதலில் குரல் கொடுத்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். இதனை எதிர்த்தும் போராட்டங்களை நடத்தியுள்ளோம். கருணாநிதி ஆட்சியில்தான் இலவச மின்சார திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் விவசாயிகளின் கடன்சுமை குறைந்தது. அதுமட்டுமல்லாமல் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி, நெல்கொள்முதல் நிலையம் திறப்புபோன்ற விவசாயிகளுக்கான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்றைக்கு, நானும் விவசாயிதான் என்று சொல்லிக்கொள்பவர்கள் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களுக்கு துணைபோகிறார்கள்.

மத்திய அரசின் அதிகாரத்தை மாநிலத்திற்குள் திணிக்கும் வகையில் உள்ளது. ஜனநாயகத்தை குழப்புகிற வகையில் இந்த 3 வேளாண் சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து வீடு, வீடாக சென்று விவசாயிகள் மட்டுமின்றி இளைஞர்கள், மாணவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவது பற்றி விளக்கி கூற வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்காக அரசுடன் இணைந்து போராடுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த துணிச்சல் வேறு யாருக்கும் கிடையாது. தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை கவர்னர் மறுக்க என்ன அதிகாரம் உள்ளது. ஒற்றை ஆட்சியாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில தீர்மானக்குழு செயலாளர் ஏ.ஜி.சம்பத், மாநில மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், விவசாய அணி மாநில துணைத்தலைவர் மதியழகன், இணை செயலாளர்கள் செந்தமிழ்செல்வன், அருள்செல்வன், துணை செயலாளர்கள் ஆதிசேஷன், வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கரன், துணை அமைப்பாளர்கள் கேசவன், சுந்தரமூர்த்தி, பாபுஜீவானந்தம், தண்டபாணி உள்பட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாய அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story