புதிய மின் இணைப்பு வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது


புதிய மின் இணைப்பு வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
x
தினத்தந்தி 23 Oct 2020 8:37 PM IST (Updated: 23 Oct 2020 8:37 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 34). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் கிராம பிரிவில் அவர் விண்ணப்பித்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மின் வாரிய முதல்நிலை மேற்பார்வையாளர் பழனிசாமி (42) புதிய மின் இணைப்பு வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை மேற்பார்வையாளர் பழனிசாமியிடம் வழங்குமாறு தனலட்சுமியிடம் கொடுத்து அனுப்பினர். பணத்தை பெற்று கொண்ட அவர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், அதிகாரி பழனிசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story