திருச்செங்கோடு அருகே சோகம்: புளியமரத்தில் கார் மோதியதில் தே.மு.தி.க. நிர்வாகி, மாமனார் பலி - மனைவி உள்பட 3 பேர் படுகாயம்


திருச்செங்கோடு அருகே சோகம்: புளியமரத்தில் கார் மோதியதில் தே.மு.தி.க. நிர்வாகி, மாமனார் பலி - மனைவி உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Oct 2020 4:45 PM GMT (Updated: 2020-10-23T20:53:16+05:30)

திருச்செங்கோடு அருகே புளியமரத்தில் கார் மோதியதில் தே.மு.தி.க. நிர்வாகி, அவருடைய மாமனார் பலியானார்கள். மேலும் அவருடைய மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜய் கமல் (வயது 42). இவர் தே.மு.தி.க. மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். மேலும் நாமக்கல் மாவட்ட துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இவர் திருச்செங்கோடு கொசவம்பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி திவ்யா (36).

இந்தநிலையில் திவ்யாவின் தந்தையான, ஈரோடு மாவட்டம் பழையபாளையத்தை சேர்ந்த துணி வியாபாரி ரெங்கநாதன் (60) என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக விஜய் கமல் அவருக்கு சொந்தமான காரில் மனைவி திவ்யா, மாமனார் ரெங்கநாதன், மாமியார் மாதேஸ்வரி மற்றும் திவ்யாவின் தங்கை அகல்யா (26) ஆகியோருடன் பெங்களூருவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றார்.

அங்கு தனியார் ஆஸ்பத்திரியில் ரெங்கநாதனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இதையடுத்து சிகிச்சை முடிந்து 5 பேரும் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை விஜய் கமல் ஓட்டினார். முன்னால் ரெங்கநாதனும், பின்னால் 3 பெண்களும் அமர்ந்து இருந்தனர். இந்தநிலையில் கார் நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தோக்கவாடி கருமகவுண்டன்பாளையம் என்ற பகுதியில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரம் உள்ள புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரெங்கநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் அடைந்த விஜய் கமல் உயிருக்கு போராடினார். அகல்யா சிறு காயத்துடனும், திவ்யா கால் முறிவுடனும், மாதேஸ்வரி காயத்துடனும் உயிர் தப்பினர். அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த விஜய் கமலை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து விஜய் கமலின் உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த பெண்கள் 3 பேரும் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உதவி பேராசிரியர் மற்றும் அவருடைய மாமனார் பலியான சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story