மராட்டியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு


மராட்டியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2020 9:34 PM GMT (Updated: 23 Oct 2020 9:34 PM GMT)

மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தில் கடந்த வாரம் புனே, அவுரங்காபாத், கொங்கன் மண்டலங்களில் பலத்த மழை பெய்தது.

வெள்ளத்தால் பாதிப்பு

மும்பையையொட்டி இருந்த தானே மாவட்டமும் மழைக்கு கடும் சேதத்தை சந்தித்தது. மழையால் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான ஹெக்டேரில் பயிர்கள் நாசமாகின. 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். குறிப்பாக உஸ்மனாபாத், லாத்தூர், சோலாப்பூர், நாந்தெட், புனே, பண்டர்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு பயிரிடப்பட்டு இருந்த பருத்தி, கரும்பு, சோயாபீன் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மந்திரிகள் மற்றும் சட்டசபை எதிர்ட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர். இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்யும் என கூறியிருந்தார்.

ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணம்

இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள வர்ஷா பங்களாவில் வெள்ள நிவாரணம் அறிவிப்பது குறித்து மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். மந்திரிகள் பாலசாகிப் தோரட், ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்டவர்கள் நேரடியாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

தீபாவளிக்கு முன்

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

விவசாயிகள் புறக்கணிக்கப்பட மாட்டாா்கள் என அவர்களிடம் நாங்கள் உறுதி அளித்து இருந்தோம். உண்மையில் எனக்கு பேக்கேஜ் என்ற வார்த்தை பிடிக்காது. ஆனால் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாங்கள் ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்குவோம். இந்த தொகை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். தீபாவளிக்கு முன் இந்த உதவியை செய்ய முயற்சி செய்வோம்.

விவசாயிகளின் கண்ணீரை துடைக்க நேர்மையாக நாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இவை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும். தேவைப்பட்டால் கடன் வாங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சரத்பவார் வரவேற்பு

மாநில அரசு ஒதுக்கி உள்ள நிவாரணத்தில் ரூ.2 ஆயிரத்து 635 கோடி வெள்த்தால் சேதமடைந்த பாலங்கள், சாலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 கோடி ஊரக பகுதிகளில் குடிநீர் வினியோகத்தை சீரமைக்கவும், நகர்பகுதிகளில் மின்சாரம், குடிநீர் சப்ளையை சீரமைக்க முறையே ரூ.300, ரூ.239 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணம் அறிவித்த அரசின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வரவேற்பு தெரிவித்து உள்ளார். அவர் ஆட்சியில் உள்ளவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பார்கள் என்றார்.

பட்னாவிஸ் விமர்சனம்

எனினும் மாநில அரசின் முடிவை சட்டசபை எதிர்க் கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த ஆட்சியின் போது வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிவாரணமும், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். ஆனால் இன்று அவர்களின் அறிவிப்பு விவசாயிகளின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து உள்ளது” என்றார்.

Next Story