கூடலூர், நெல்லியாளம் பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


கூடலூர், நெல்லியாளம் பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Oct 2020 5:45 AM GMT (Updated: 24 Oct 2020 6:32 AM GMT)

கூடலூர், நெல்லியாளம் பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஜென்மம் நிலங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பாலவாடி பகுதியில் கட்டப்பட்டு வரும் 46 வீடுகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கூடலூர் ஆர்.டி.ஓ ராஜ்குமார், தாசில்தார் தினேஷ்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் கூடலூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.57.50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். இதில் அம்மைகுளம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி, கீழ்நாடுகாணி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.3 லட்சம் செலவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கத்திமட்டம் அங்கன்வாடி மையம் கட்டும் பணி, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் பந்தலூர் முருகன் கோவில் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

பின்னர் நெல்லியாளம் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியையும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் மேங்கோரேஞ்சு முதல் கொளப்பள்ளி வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் தரமாக இருக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். இதேபோன்று கொளப்பள்ளி முதல் உப்பட்டி வரை ரூ.7 லட்சம் செலவில் தடுப்பு சுவர் கட்டுதல், ஒலிமடாவில் ரூ.7 லட்சம் செலவில் தடுப்பு சுவர் கட்டும் பணி, ரூ.5 லட்சம் செலவில் சாலகுன்னாவில் சாலை அமைக்கும் பணி, பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் செலவில் பொன்னம்மா பாலம் மற்றும் ஆதிவாசி குடியிருப்புக்கு செல்லும் சாலை என மொத்தம் ரூ.57.50 லட்சம் செலவில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) வெங்கடாசலம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story