மனைவியிடம் ரூ.1 லட்சம் பறிக்க கடத்தல் நாடகமாடிய கார் டிரைவர் கைது


மனைவியிடம் ரூ.1 லட்சம் பறிக்க கடத்தல் நாடகமாடிய கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2020 10:56 PM GMT (Updated: 24 Oct 2020 10:56 PM GMT)

மனைவியிடம் ரூ.1 லட்சம் பறிக்க கடத்தல் நாடகமாடிய வாடகை கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை ஓஷிவாரா பகுதியை சேர்ந்தவர் ஜித்தேந்திரா யாதவ்(வயது27). வாடகை கார் டிரைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி உத்தரபிரதேசத்திற்கு சென்று இருந்தார். இந்தநிலையில் கடன் தொல்லையால் அவதி அடைந்த அவர், மனைவியிடம் பணம் பறிக்க நூதன முறையில் திட்டம் போட்டார்.

இந்த திட்டத்திற்கு அவரது நண்பர் இந்திரகுமார்(27) என்பவர் உடந்தையாக இருந்தார். கடந்த 21-ந் தேதி ஜித்தேந்திர யாதவின் மனைவி செல்போன் நம்பருக்கு வீடியோ ஒன்று வந்தது.

ரூ.1 லட்சம்

இதனை பார்த்தபோது, கணவர் ஜித்தேந்திர யாதவை ஒருவர் கத்தி முனையில் மிரட்டியபடி உடனடியாக தனக்கு ரூ.1 லட்சம் தரவேண்டும், இல்லையெனில் உங்கள் கணவரை கொன்று உடலை தண்டவாளத்தில் வீசி விடுவேன் என கூறியிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜித்தேந்திர யாதவின் மனைவி தனது சகோதரர் சுசில்குமாரிடம் தெரிவித்தார். உடனே அவர் சம்பவம் குறித்து மும்பை போலீசில் புகார் அளித்தார். மேலும் வீடியோவை போலீசாருக்கு அனுப்பி வைத்தார்.

2 பேர் சிக்கினர்

இந்த புகாரின் படி போலீசார் ஜித்தேந்திர யாதவின் செல்போன் நம்பரை கொண்டு விசாரணை நடத்தினர். இதில் 24 மணி நேரத்தில் அவரது இருப்பிடம் தெரியவந்தது. இவர் தாராபுரே பூங்கா அருகே உள்ள வாடகை காரில் படுத்து உறங்கி கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே அவரை பிடித்து விசாரித்தனர். இதில் தன்னை தானேவிற்கு கடத்தி சென்றதாகவும், பணம் கிடைக்காததால் தன்னை விடுவித்ததாகவும் போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் குட்டு அம்பலமானது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கடத்தல் நாடகத்திற்கு உடந்தையாக இருந்த இந்திரகுமாரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர்.

Next Story