நகைகளுக்கு கூடுதல் வட்டி தருவதாக ரூ.20 கோடி மோசடி பெண் கைது; வங்கி அதிகாரிக்கு வலைவீச்சு


நகைகளுக்கு கூடுதல் வட்டி தருவதாக ரூ.20 கோடி மோசடி பெண் கைது; வங்கி அதிகாரிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Oct 2020 6:00 AM IST (Updated: 25 Oct 2020 6:00 AM IST)
t-max-icont-min-icon

மண்டியாவில் நகைகளுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.20 கோடி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வங்கி ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மண்டியா, 

மண்டியா டவுன் குத்தாலு பகுதியை சேர்ந்தவர் சோமசேகர். இவர் மண்டியாவில் உள்ள வங்கி ஒன்றில் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சோமசேகர், அதே பகுதியை சேர்ந்த பூஜா நிகில் என்பவருடன் சேர்ந்து, மண்டியா டவுனை சேர்ந்த பல பெண்களிடம், தங்களது வங்கியில் நகைகளை டெபாசிட் செய்தால் 40 சதவீதம் வட்டி தருவதாக கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய ஏராளமான பெண்கள், பூஜா நிகில் மூலம் சோமசேகரிடம் நகைகளை கொடுத்துள்ளனர். இவ்வாறு அவரிடம் மண்டியாவை சேர்ந்த ஷீலா என்ற பெண்ணும் தனக்கு சொந்தமான ஒரு கிலோ 400 கிராம் தங்க நகைகளை கொடுத்துள்ளார். ஆனால் ஷீலாவுக்கு வட்டி பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் பூஜா நிகில், சோமசேகரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.

36 பேரிடம் ரூ.20 கோடி மோசடி

இதைதொடர்ந்து ஷீலா, நகைகளுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி பூஜாநிகிலும், சோமசேகரும் மோசடி செய்துவிட்டதாக மண்டியா டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பூஜா நிகில், வங்கி அதிகாரி சோமசேகர் மற்றும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பெண்களிடம் நகைகளுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி 36 பெண்களிடம் ரூ.20 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

இவர்களிடம் மண்டியா மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி தலைவி ராஸ்மியும் நகையும், ரூ.18 லட்சமும் கொடுத்து ஏமாற்றம் அடைந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பூஜா நிகில், சோமசேகர், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான அவர்களை தேடி வந்தனர்.

பெண் கைது

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பூஜா நிகிலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான பூஜா நிகில், ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு மோசடியில் ஈடுபட்டதும், மேலும் உயர்தர விருந்து நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனால் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள சோமசேகர் உள்ளிட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story