பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது புதுவை கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புதுவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல் பூஜை பொருட்கள் விற்பனையும் களைகட்டியது. பொருட்கள் வாங்க மார்க்கெட் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி,
ஆயுதபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் உபகரணங்களை பூஜையிட்டு வழிபடுவார்கள். அந்தவகையில் வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆயுதபூஜை உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டன. ஒருசில அலுவலகங்களில் நேற்றே கொண்டாடப்பட்டது.
வீடுகள், தனியார் நிறுவனங்களில் இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அவல், பொரி, கடலை, சர்க்கரை, பழங்கள், வாழை மரம், தோரணங்கள், இனிப்புகள் விற்பனை நேற்று விறுவிறுப்புடன் நடந்தது.
பூக்கள் விலை உயர்வு
புதுச்சேரியில் மார்க்கெட்டுகளில் பழங்கள், பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பூக்கள் விலை வெகுவாக அதிகரித்து உள்ளது. பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை (கிலோவில்) நிலவரம் வருமாறு:-
சாமந்தி ரூ.160 முதல் ரூ.240 வரை, ரோஸ் ரூ.100 முதல் ரூ.150 வரை, மல்லி ரூ.600, முல்லை ரூ.600-க்கும் விற்பனையானது. சாத்துக்குடி, கொய்யாப்பழங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ சாத்துக்குடி ரூ.30-க்கும், கொய்யாப்பழம் ரூ.40-க்கும் விற்பனையானது. ஆனால் நேற்று சாத்துக்குடி ரூ.40-க்கும், கொய்யாப்பழம் ரூ.50-க்கும், ஆப்பிள் கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.150-க்கும், செவ்வாழை ரூ.60-ல் இருந்து ரூ.80-க்கும் விற்பனையானது.
அதேபோல அவல், சர்க்கரை, பொறிகடலை, நிலக்கடலை, கற்கண்டு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகின்றன. எலுமிச்சை பழம், பூசணிக்காய், கரும்பு ஆகியவை விற்பனையும் களைகட்டியது.
மக்கள் கூட்டம்
ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க மார்க்கெட் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆங்காங்கே நகரின் முக்கிய வீதிகளில் தற்காலிக கடைகள் முளைத்திருந்தன. பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை அங்கே வாங்கினர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தனர். இதனால் அங்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் இதனை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென எச்சரித்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story