குன்னத்தில் ஏரியில் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டைகள் கிடையாது


குன்னத்தில் ஏரியில் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டைகள் கிடையாது
x
தினத்தந்தி 25 Oct 2020 9:11 AM IST (Updated: 25 Oct 2020 9:11 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் ஏரியில் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டைகள் கிடையாது என்று, அதனை ஆய்வு செய்த அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்தார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பெரிய ஏரியில் கடந்த 21-ந் தேதி வண்டல் மண் எடுத்தபோது டைனோசர் முட்டை போன்று உருண்டை வடிவிலான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை பொதுமக்கள் டைனோசர் முட்டைகளாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஏரியில் தோண்ட தோண்ட டைனோசர் முட்டைகள் கிடைப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாக பரவியது. இந்த உருண்டை வடிவிலான படிமங்கள் டைனோசர் முட்டையா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்ய அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்கள் சிவக்குமார் (திருச்சி), உமாசங்கர் (அரியலூர்) ஆகியோர் குன்னத்திற்கு வந்தனர்.

டைனோசர் முட்டைகள் கிடையாது

அவர்கள் படிமங்களை பார்வையிட்டு கள ஆய்வு நடத்தினர். அப்போது காப்பாட்சியர் சிவக்குமார் கூறுகையில், குன்னம் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உருண்டைகள் எதுவும் டைனோசர் முட்டைகள் கிடையாது. ஏரியில் வெளிர் மஞ்சள் நிறத்தில் 80 மிக தொன்மையான உருண்டைகள் காணப்படுகிறது. அதில் 3 உருண்டைகளின் மையத்தில் அமோனைட் எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்கள் உள்ளன. 64 அடி அங்குலம் கொண்ட உருண்டையின் நடுவே 17 அங்குலம் அளவிற்கு நத்தையின் படிமம் உள்ளது. மீதமுள்ள அனைத்தும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் தான். இது தொடர்பான மேற்கொண்ட களஆய்வு குறித்து சென்னை அரசு அருங்காட்சியக புவியியல் காப்பாட்சியர் தனலட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அருங்காட்சியக ஆணையர் சண்முகத்திற்கு கள ஆய்வு தொடர்பாக முழுமையான ஆய்வறிக்கை அனுப்ப உள்ளோம், என்றார்.

அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கள ஆய்வு செய்து குன்னம் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உருண்டைகள் எதுவும் டைனோசர் முட்டைகள் இல்லை என்று கூறியதால், குன்னத்தில் டைனோசர் முட்டைகள் உள்ளதாக சமூக வலைத்தளங்கில் பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story