நீர்வரத்து 1000 கனஅடியாக உயர்வு: மோர்தானா அணை பகுதியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு - கவுண்டன்யமகாநதியில் வெள்ளப்பெருக்கு
நீர்வரத்து 1000 கனஅடியாக உயர்ந்ததால், மோர்தானா அணை பகுதியை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் 3 ஆண்டுக்கு பிறகு கவுண்டன்யமகாநதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தானா அணை 470 மீட்டர் நீளமும் 11.5 மீட்டர் உயரமும் கொண்டது. அணையில் 260 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்கலாம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி மோர்தானா அணை நிரம்பியது. 60 கன அடி தண்ணீர் நிரம்பி வழிந்தது.
கடந்தசில நாட்களாக ஆந்திராவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. புங்கனூர், பலமநேர், காலவபல்லி, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் நேற்று அதிகாலை மோர்தானா அணைக்கு 984 கன அடி தண்ணீர் வந்தது. வந்த தண்ணீர் அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. அந்தத் தண்ணீர் ஜிட்டப்பல்லி செக்டேம் வரை சென்று, அங்கிருந்து கவுண்டன்யமகாநதி ஆற்றில் பாய்ந்தோடுகிறது. அந்தத் தண்ணீர் நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கும், கவுண்டன்யமகாநதி ஆற்றிலும் செல்கிறது.
இதையறிந்த சுற்று வட்டாரக் கிராம மக்கள் திரண்டு வந்து கவுண்டன்யமகாநதி ஆற்றில் ஓடும் தண்ணீரை பார்த்துச் செல்கிறார்கள். நேற்று இரவு சுமார் 8 மணிக்கு குடியாத்தம் கங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை வந்தடைந்தது. மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால், கவுண்டன்யமகாநதி ஆற்றோரம் உள்ள மோர்தானா, கொட்டாரமடுகு, ஜிட்டப்பல்லி, சேம்பள்ளி, ஜங்காலபள்ளி, உப்பரபள்ளி, தட்டப்பாறை ஆண்டிகான்பட்டி, ரங்கசமுத்திரம், ரேணுகாபுரம், அக்ராவரம், பெரும்பாடி, மீனூர், முங்கப்பட்டு, சீவூர், குடியாத்தம் டவுன், இந்திராநகர், ஒலகாசி, சித்தாத்தூர் மற்றும் ஹைதர்புரம் ஆகிய பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், எனப் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை, குடியாத்தம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
மோர்தானா அணை நிரம்பி சுமார் 1000 கன அடி நீர் வழிந்து ஓடுவதால் அணை பகுதியை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜிட்டப்பல்லி, தடுப்பணை பகுதிக்கும், கவுண்டன்யமகாநதி ஆற்றில் தண்ணீர் செல்லும் பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை வேலூர் கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், குடியாத்தம் தாசில்தார் வத்சலா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கஸ்பாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story