பட்டாசு கடைக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அதிகாரி கைது
பட்டாசு கடைக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் மதனவேல்(வயது 42). மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க முடிவு செய்தார். அதற்கு தீயணைப்பு நிலையத்தில் தடையில்லா சான்று பெற வேண்டியது அவசியம்.
எனவே தடையில்லா சான்று கேட்டு கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் மதனவேல் விண்ணப்பித்தார். ஆனால் அந்த தீயணைப்பு நிலைய அதிகாரி (எஸ்.எப்.ஓ.) சசிகுமார்(57), தடையில்லா சான்று வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுத்து தடையில்லா சான்று பெற மதனவேல் விரும்ப வில்லை. இதனால் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறை அதிகாரி சசிகுமாரை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 11.30 மணியளவில் மதனவேலுவிடம் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை கொடுத்து தீயணைப்பு நிலைய அதிகாரியிடம் கொடுக்க சொல்லி அனுப்பி வைத்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி சசிகுமாரை மதனவேல் சந்தித்து ரூ.6 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, மதனவேலுவிடம் இருந்து லஞ்சம் வாங்கிய சசிகுமாரை கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story