சாக்குலூத்துமெட்டு மலைப்பாதையில் சாலை அமைக்கக்கோரி விவசாயிகள் நடைபயணம் போலீசார் தடுத்ததால் பரபரப்பு


சாக்குலூத்துமெட்டு மலைப்பாதையில் சாலை அமைக்கக்கோரி விவசாயிகள் நடைபயணம் போலீசார் தடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Oct 2020 5:29 AM GMT (Updated: 26 Oct 2020 5:29 AM GMT)

தேவாரம் அருகே சாக்குலூத்து மெட்டு மலைப்பாதையில் சாலை அமைக்கக்கோரி விவசாயிகள் நடைபயணம் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவாரம், 

தேனி மாவட்டம் தேவாரம் அருகே தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் சாக்குலூத்துமெட்டு பகுதி உள்ளது. கேரளாவை ஒட்டிய தமிழக கிராமமான மீனாட்சிபுரத்தில் இருந்து சாக்குலூத்து மெட்டு வழியாக 4 கி.மீ. தூரத்திற்கு மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் சாலை அமைத்தால் கேரளாவிற்கு எளிதாக சென்றுவிடலாம். ஆனால் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் அந்த பாதையில் வருவதால், அதில் சாலை அமைக்க அனுமதி தராமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக-கேரளா இடையே வணிகம், விவசாயம் போன்றவற்றிற்கும், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கும் மீனாட்சிபுரம் பகுதி மக்கள் செல்ல முடியவில்லை. எனவே தமிழகம்-கேரளாவை இணைக்கும் சாக்குலூத்து மெட்டு மலைப்பாதையில் சாலை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தேவாரத்தில் இருந்து சாக்குலுத்து மெட்டு அடிவாரம் வரை நடைபயணம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.

நடைபயணம்

அதன்படி நேற்று தேவாரத்தில் இருந்து விவசாயிகள் நடைபயணத்தை தொடங்கினர். இதற்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் பொன் காட்சிகண்ணன் வரவேற்றார்.

தேவாரத்தில் நடைபயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து சென்றனர். இதற்கிடையே சாக்குலூத்து மலை அடிவாரத்தில் இருந்து மீண்டும் விவசாயிகள் நடைபயணமாக சென்றனர். அப்போது அவர்களை தேவாரம் வனத்துறையினர் மறித்தனர். இதன்பின்பு அங்குள்ள பெருமாள் கோவில் வரை நடைபயணம் சென்றனர். இதில் தேவாரம், கோம்பை, தே.சிந்தலைசேரி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story