ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை: மத்திய பிரதேச மாநிலத்தில் 4 தனிப்படையினர் முகாமிட்டு விசாரணை


ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை: மத்திய பிரதேச மாநிலத்தில் 4 தனிப்படையினர் முகாமிட்டு விசாரணை
x
தினத்தந்தி 26 Oct 2020 11:26 PM GMT (Updated: 26 Oct 2020 11:26 PM GMT)

சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக, மத்திய பிரதேச மாநிலத்தில் 4 தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர், 

காஞ்சீபுரத்தில் இருந்து செல்போன்களை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த 21-ந் தேதி அதிகாலை சென்ற போது கொள்ளையர்கள் லாரியை வழிமறித்து 2 டிரைவர்களை தாக்கினார்கள். மேலும் லாரியை கடத்தி சென்று அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்தனர். மேலும் லாரியை சிறிது தொலைவில் விட்டு சென்றனர்.

இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் கொள்ளையர்கள் மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித் ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பல் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் ஓசூரில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.

பெரிய சவால்

அவர்கள் அங்குள்ள தீவாஸ் மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்களை கைது செய்வது போலீசாருக்கு பெரிய சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.

குற்ற செயல்களில் ஈடுபடும் இந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றால், அந்த பகுதி மக்கள் தங்களை தாக்கி கொண்டு, போலீசாரின் மீது பொய் புகார் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் மத்திய பிரதேச மாநில போலீசாரின் உதவியுடன் அந்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கொள்ளையர்கள் அனைவரையும் கூண்டோடு பிடித்து, கொள்ளை போன ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களையும் மீட்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Next Story