ரூ.1¼ கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி தாட்கோ மேலாண்மை இயக்குனர் விஜயராணி ஆய்வு


ரூ.1¼ கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி தாட்கோ மேலாண்மை இயக்குனர் விஜயராணி ஆய்வு
x
தினத்தந்தி 26 Oct 2020 11:36 PM GMT (Updated: 26 Oct 2020 11:36 PM GMT)

கொல்லிமலை ஏகலைவா மாதிரி பள்ளியில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை தாட்கோ மேலாண்மை இயக்குனர் விஜயராணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செங்கரையில் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பழங்குடியின மாணவ, மாணவிகள் 357 பேர் தங்கி படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் தாட்கோ மூலம்் 12 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதை தாட்கோ மேலாண்மை இயக்குனர் விஜயராணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்்.

அதனை தொடர்ந்து ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டிடம், ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடம், ரூ.80 லட்சம் மதிப்பில் சமையல் அறை, உணவு உண்ணும் அறை, கழிவறை கட்டிடங்கள், ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கான விடுதி கட்டிடம், ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் மாணவிகளுக்கான விடுதி கட்டிடம், ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான இடங்களையும் தாட்கோ மேலாண்மை இயக்குனர் விஜயராணி நேரில் சென்று பார்வையிட்டார்.

பாராட்டு

ஏகலைவா பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவ, மாணவிகள் 2018-2019, 2019-2020-ம் ஆண்டுகளில் 10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சியும், 2019-20-ம் ஆண்டில் பிளஸ்-1 வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியும் பெற்றதற்காக பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை தாட்கோ மேலாண்மை இயக்குனர் பாராட்டினார். மேலும் இப்பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கேடயங்கள் மற்றும் கோப்பைகளையும் அவர் பார்வையிட்டார். மேலும் நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பு பகுதியில் ஆப்செட் பிரிண்டிங் தொழில் செய்ய மானிய உதவி பெற்று ஆப்செட் தொழில் நடத்தி வரும் பயனாளியை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த ஆய்வுகளின் போது சென்னை (தாட்கோ) பொது மேலாளர் (தொழில்நுட்பம்) அழகுபாண்டியன், நாமக்கல் மாவட்ட மேலாளர் சரவணகுமார், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ராமசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story