காங்கிரசில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: முதல்-மந்திரியை எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்வார்கள் - சித்தராமையா பேட்டி


காங்கிரசில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: முதல்-மந்திரியை எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்வார்கள் -  சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2020 6:10 AM IST (Updated: 27 Oct 2020 6:10 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரியை, எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்வார்கள் என்றும், இதுதொடர்பாக காங்கிரசில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் சித்தராமையா கூறினார்.

கலபுரகி,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பீதரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வட கர்நாடகத்தில் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வட கர்நாடகத்தில் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். இந்த வெள்ள சேதங்கள் குறித்து விவாதிக்க கர்நாடக அரசு உடனடியாக கர்நாடக சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். ஒருபுறம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்னொருபுறம் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மற்றொருபுறம் மாநில அரசின் ஊழல் தாண்டவமாடுகிறது.

இதுகுறித்து விவாதிக்க சட்டசபை தான் சரியான தளம் ஆகும். எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாத மாநில அரசு சட்டசபை கூட்டத்தை நடத்தாமல் இருக்கிறது. வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மாநில அரசு இதுவரை ஆய்வு பணியையும் நடத்தவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பா ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார். வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெயருக்கு நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவிகளையும் இந்த அரசு செய்யவில்லை.

விவசாய பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. இன்னொருபுறம் விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் புதிதாக விதைப்புகளை பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளின் கஷ்டங்களை கேட்க ஆட்சியாளர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டை, பீதரில் நான் ஆய்வு செய்துள்ளேன். வெள்ள சேதங்கள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஒரு விரிவான கடிதம் எழுதுவேன். ரூ.1,500 கோடிக்கு விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதுவரை விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, பயிர்கள் பாதிப்புக்கு எக்டேருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கினேன். காங்கிரஸ் கட்சியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பா.ஜனதாவில் தான் அதிருப்தி உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பேசியுள்ள எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம் பா.ஜனதாவுக்கு இல்லை. அக்கட்சியினருக்கு எங்களை பற்றி பேச தகுதி இல்லை. அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரியாக வர வேண்டும் என்பதை எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி மேலிடம் ஆகியவை தான் முடிவு செய்யும்.

இது தான் உண்மை. மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு மதிப்பு இருப்பது இல்லை. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் தனது காவி உடையை மாற்றிக்கொள்வது நல்லது. அவரால் அந்த உடைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. 27 கிரிமினல் வழக்குகளை தன் மீது வைத்துள்ள அவரால் சட்டம்-ஒழுங்கை எப்படி நிலை நாட்ட முடியும்?. இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story