மத்திய அரசுடன் சேர்ந்து புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க கவர்னர் முயற்சி முதல்-அமைச்சர் நாராயணசாமி மீண்டும் குற்றச்சாட்டு


மத்திய அரசுடன் சேர்ந்து புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க கவர்னர் முயற்சி முதல்-அமைச்சர் நாராயணசாமி மீண்டும் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 Oct 2020 6:55 AM IST (Updated: 27 Oct 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுடன் சேர்ந்து புதுச்சேரியின் உரிமைகளை பறித்து தமிழகத்துடன் இணைக்க கவர்னர் முயற்சிப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

பாகூர்,

கிருமாம்பாக்கத்தில் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு ரூ.1.80 கோடி செலவில் மாணவிகள் விடுதி கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. பல்வேறு காரணங்களால் தாமதமாகி 12 ஆண்டுகளுக்குப்பின் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் பத்மாவதி வரவேற்றார். அரசு செயலர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாணவிகள் விடுதியை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சாய்சுப்ரமணியம், சமூக நலத்துறை இயக்குனர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, நான் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இணை மந்திரியாக இருந்தேன். அப்போது அடுக்குமாடி குடியிருப்பு, சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை புதுச்சேரிக்கு கொண்டு வந்தேன். இந்த திட்டங்களை ரங்கசாமியும், அமைச்சராக இருந்த ராஜவேலும் சரியாக செயல்படுத்தாமல் முடக்கினார்கள். ரூர்பன் திட்டத்தின் மூலம் பாகூருக்கு 100 கோடி ரூபாய் வாங்கி கொடுத்தேன். ஆனால் ஒருவர், தான் வாங்கிக் கொடுத்ததாக போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டு இன்றைக்கு வீட்டிற்கு போய்விட்டார்.

இந்தியாவில் ஆந்திரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இலவச அரிசி கொடுக்கப்படுகிறது. புதுச்சேரியில் மட்டும் அரிசி தர வேண்டாம் என கவர்னர் தடுக்கிறார். மத்திய அரசுடன் சேர்ந்து கவர்னர் புதுச்சேரியின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழகத்துடன் இணைக்க முயற்சிக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் புதுச்சேரியில் எதிர்க்கட்சி செயல்படாமல், எதிரி கட்சியாக இருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் மவுனம் காக்கிறார்கள். எங்கள் மீதான குறைகளை நேரடியாக கேளுங் கள். அதை விடுத்து, அரசின் திட்டங்களை முடக்குவது நியாயமற்றது.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் தான் முடிக்கப்படும் என்பது சரித்திரமாக இருந்து வருகிறது. மின்துறையில் பொறியாளர் பணியிடம், எல்.டி.சி., 30 சப்-இன்ஸ்பெக்டர், 500 காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் முடக்கி வருகிறார்.

இப்படி ஒரு சூழ்நிலையிலும் நாங்கள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஏரி சங்கம் மூலமாக புகார் தெரிவிக்க வைத்து, குடிநீர் திட்டங்களை கவர்னர் தடுத்து நிறுத்தி உள்ளார். தற்போது மத்திய அரசு குடிநீர், விவசாயத்துக்கு எங்கு வேண்டுமானாலும் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இப்போது கவர்னர் என்ன செய்யப்போகிறார். புதுச்சேரியின் வளர்ச்சி விகிதம் 9 சதவீதம், மத்திய அரசின் வளர்ச்சி விகிதம் மைனஸ் 1 சதவீதமாக உள்ளது. புதுச்சேரியில் பல தடைகளை மீறி மக்களின் ஒத்துழைப்புடன் ஆட்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

விழா முடிவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உதவி இயக்குனர் சுகந்தி நன்றி கூறினார்.


Next Story