அரசியலில் எதுவும் நடக்கும்: “தே.மு.தி.க. நினைத்தால் 3-வது அணி அமைக்க முடியும்” விஜயகாந்த் மகன் பேட்டி


அரசியலில் எதுவும் நடக்கும்: “தே.மு.தி.க. நினைத்தால் 3-வது அணி அமைக்க முடியும்” விஜயகாந்த் மகன் பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2020 7:32 AM IST (Updated: 27 Oct 2020 7:32 AM IST)
t-max-icont-min-icon

அரசியலில் எதுவும் நடக்கும் என்றும், தே.மு.தி.க. நினைத்தால் 3-வது அணி அமைக்க முடியும் எனவும் மதுரையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறினார்.

மதுரை, 

விஜயகாந்த் உடல் நிலை சீராக உள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. தே.மு.தி.க. தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி பணிகளை இன்னும் விரைவுபடுத்துவோம். கட்சி தொண்டர்களின் எண்ணங்களை விஜயகாந்தும், பிரேமலதாவும் நிறைவேற்றுவார்கள். தேர்தலில் தே.மு.தி.க. தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை. ஏற்கனவே தனித்து நின்று தேர்தலை சந்தித்துள்ளோம். வியூகங்கள் மாறும். கட்சிக்கு எது பலமோ அதனை செயல்படுத்துவோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை.

3-வது அணி

தமிழகத்தில் கண்டிப்பாக அரசியல் களம் மாறும். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று தே.மு.தி.க.தான். அதனை நிரூபித்து காட்டி இருக்கிறோம். எங்களை தவிர்த்து 3-வது அணி என்று எந்த கட்சியும் சொல்ல முடியாது. தே.மு.தி.க. நினைத்தால் தான் 3-வது அணி அமைக்க முடியும்.

3-வது அணி அமைய வாய்ப்பு உள்ளது. வரும் தேர்தலில் சிறியவர், பெரியவர் என்றெல்லாம் இல்லை. அனைத்து தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்வார். மக்களை சந்திக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story