கூடலூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசம் 3 வீடுகள் சேதம்
கூடலூர் அருகே 3 வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அங்குள்ள கெவிப்பாரா, காமராஜ் நகர், கோக்கால் மலையடிவாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக காட்டுயானைகள் கூட்டமாக முகாமிட்டு உள்ளன. மேலும் கூடலூர்- ஓவேலி சாலையை அடிக்கடி கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள புளியாம்பாரா, கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமங்களில் மற்றொரு காட்டுயானைகள் கூட்டம் முகாமிட்டு உள்ளது. தொடர்ந்து இரவு நேரத்தில் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றன. மேலும் அப்பகுதியில் பயிரிட்டுள்ள வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டுயானைகள் தினமும் வருவதால் கோழிக்கொல்லி ஆதிவாசி மக்கள் பலர் இரவில் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தங்கி வருகின்றனர்.
வீடுகள் சேதம்
அதன்படி அதே பகுதியை சேர்ந்த பிஞ்சன், சங்கரன் ஆகியோர் கடந்த 25-ம் தேதி இரவில் உறவினர் வீட்டில் தங்கினர். அப்போது காட்டுயானைகள் கூட்டம் வழக்கம்போல பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. நள்ளிரவில் பிஞ்சன், சங்கரன் ஆகியோரது வீடுகளை காட்டுயானைகள் இடித்து சேதப்படுத்தின. மேலும் அங்கு வைத்திருந்த அரிசி, பருப்பு, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை நாசம் செய்தன. தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த கோத்தன் என்பவரது வீட்டை சேதப்படுத்தின. அப்போது வீட்டில் இருந்த கோத்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் கூச்சலிட்டனர். உடனே கிராம மக்கள் திரண்டு வந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனப்பகுதிக்குள் காட்டுயானைகள் விரட்டியடிக்கப்பட்டன.
உரிய நடவடிக்கை
பின்னர் மறுநாள் காலையில் தங்களது வீடுகளுக்கு வந்த பிஞ்சன், சங்கரன் காட்டுயானைகள் சேதப்படுத்தி இருந்த வீடுகளை கண்டு கவலை அடைந்தனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, காட்டு யானைகள் வீடுகளை அடிக்கடி சேதப்படுத்தி விடுகின்றன. கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் வருவாயில் வீடுகளை சீரமைக்க முடியவில்லை. வனத்துறையினரிடம் முறையிட்டாலும் சேதத்துக்கு ஏற்ப நிவாரணத்தொகை கிடைப்பதில்லை. எனவே இனிவரும் நாட்களில் வீடுகள் சேதம் அடையாமல் இருக்க காட்டுயானைகள் வருகையை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story