விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி
விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது நெல்லில் தமிழ் எழுத்துகளை எழுதி குழந்தைகள் வழிபட்டனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் விஜயதசமியையொட்டி நேற்று காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
இந்த விஜயதசமி நாளில் திருவோண நட்சத்திரமும் வருவது மற்றொரு சிறப்பு அம்சமாகும். அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்கிரீவர் ஆகிய சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள்.
அதன்படி திருவந்திபுரம் தேவநாதசாமிகோவில் எதிரே அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹயக்கிரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி ஹயக்கிரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது.
தொடர்ந்து பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கரும்பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்கிரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.
ஏடு படிக்கும் நிகழ்ச்சி
அதன்பிறகு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்லில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியான தமிழில் “ அ..ஆ” என எழுதி அவர்களது கல்வியை தொடங்கிவைத்தனர். மாணவர்களும் ஆர்வத்துடன் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலிலும் மற்றும் மலையில் உள்ள ஹயக்கிரீவர் கோவிலிலும் ஏராளமான பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொண்டு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்குள் சென்ற பக்தர்களுக்கு கையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story