சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை துரைமுருகன் பேட்டி
சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தி.மு.க.வில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்,
வேலூர் சேண்பாக்கத்தில் ஆன்லைன் மூலம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் கலந்துகொண்டு உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா தொற்று காலகட்டத்திலும் தி.மு.க.வினர் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் 18 லட்சம் பேர் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். எந்தக் கட்சியும் செய்யாத ஒன்றாக ஆன்லைன் மூலம் கட்சி பொதுக் கூட்டத்தை தி.மு.க. வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. கொரோனா காலத்திலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அயராது உழைத்து வருகிறார் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் வேலூர் மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் டாக்டர் வி.எஸ்.விஜய், வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பேச்சுவார்த்தை தொடங்கவில்லை
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்காவிட்டாலும் பாதிப்பு இல்லை என்று பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் எந்த சட்டத்தினாலும் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று அவர்கள் கூறி வருகிறார்கள். கொரோனாவினால் கூட பாதிப்பு இல்லை என்று தான் கூறுகிறார்கள்.
ஆதார் அட்டையில் தமிழ் மொழி இடம் பெறாதது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தி.மு.க. வில் கூட்டணி கட்சிகள் குறித்து இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story