சகோதரி மகளை திருமணம் செய்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி
கும்மிடிப்பூண்டி அருகே சகோதரி மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி வாலிபர் 120 மீட்டர் உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உள்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கர்ணன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது சகோதரி மகளான 17 வயது சிறுமி மீது ஒருதலை காதல் இருந்து வந்தது. தனக்கு அவரையே திருமணம் செய்து வைக்கும்படி வீட்டில் கர்ணன் வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் அவரது சகோதரியின் கணவர், பெண்ணுக்கு 17 வயது என்பதால் இப்போது திருமணம் செய்து வைக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். அதையே கர்ணனின் தாயும் கூறி உள்ளார்.
திருமணத்துக்காக 3 ஆண்டுகள் காத்திருக்கிறேன் என கர்ணன் கூறியும், வயது வித்தியாசம் அதிகமாக உள்ளதால் சரி வராது என கூறி திருமணத்துக்கு உறவினர்கள் ஒன்று சேர்ந்து தடை போட்டனர். 17 வயது சிறுமியும் திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால் கர்ணன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை மிரட்டல்
இந்த நிலையில், நேற்று முன்தினம் கர்ணன், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையத்திற்கு சென்றார். அங்குள்ள இரும்பு கேட்டை ஏறி குதித்து உள்ளே சென்ற அவர், தொலைபேசி நிலையத்தின் பின்புறத்தில் உள்ள 120 மீட்டர் உயர செல்போன் கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்கு சென்றார். இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர் முனுசாமி உடனடியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே செல்போன் கோபுரத்தில் ஏறிய கர்ணன், தனது சகோதரி மகளை திருமணம் செய்து வைத்தால் தான் மேலிருந்து கீழே இறங்குவேன். இல்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என கூறினார். மேலும், தனது 2 கால்களையும் கோபுரத்தின் இரும்பு கம்பியில் இணைத்து கொண்டு தலைகீழாக தொங்கினார்.
பேச்சுவார்த்தை
சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி தாசில்தார் கதிர்வேல், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன், போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் என பலரும் வந்து குவிந்தனர். அவர்கள் ஒலி பெருக்கி மூலம் கர்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் போலீசாரின் நடவடிக்கை எதுவும் இல்லை. திருமணம் தொடர்பாக உறவினர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம். அல்லது வேறு ஒரு இடத்தில் பெண் பார்த்து உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறோம். என ஒலிபெருக்கி மூலம் உறவினர்களும் போலீசாரும் தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையில் 3 மணி நேரம் கடந்த நிலையில் கர்ணன், மனம் மாறியதால் சிப்காட் தீயணைப்பு துறையினரின் உதவியோடு அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து மீட்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் அங்கிருந்து வீட்டுக்கு சென்றார்.
Related Tags :
Next Story