தென்காசி அருகே நடிகர் வடிவேலு பாணியில் ‘கிணற்றை காணவில்லை’ என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தென்காசி அருகே நடிகர் வடிவேலு பாணியில் கிணற்றை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி,
தென்காசி அருகே கொடிக்குறிச்சி பஞ்சாயத்து சிவராமபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றின் மீது நாகம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி, அதே ஊரைச் சேர்ந்த சுடலைமணி, கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினார். இதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.
அப்போது பொதுமக்கள் திரண்டதால் அதிகாரிகள், கிணற்றின் மீதுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் திரும்பி சென்றனர். பின்னர் கோவில் நிர்வாகத்தினர், இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது கிணற்றின் மீதுள்ள ஆக்கிரமிப்பை 2 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த 29-11-2019 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
போஸ்டரால் பரபரப்பு
தொடர்ந்து அதிகாரிகள், போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராமபேட்டைக்கு சென்று, பஞ்சாயத்து கிணற்றின் மீதுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். அப்போது கோவில் நிர்வாகத்தினர் 10 நாட்களுக்குள் தாங்களாகவே கோவிலை அகற்றுவதாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் சுத்தியலால் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார், அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். ஆனாலும் இன்னும் அங்கு பஞ்சாயத்து கிணற்றின் மீதுள்ள கோவிலை அகற்றவில்லை.
இந்த நிலையில் சிவராமபேட்டையில் பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இதேபோன்று கடையநல்லூர் யூனியன் அலுவலக பெயர் பலகையிலும் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
‘கண்ணும் கண்ணும்’ என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தனது கிணற்றை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் சென்று புகார் செய்வது போன்ற காட்சி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேபோன்று தற்போது சிவராமபேட்டையிலும் நடிகர் வடிவேலு பாணியில் ‘பஞ்சாயத்து கிணற்றை காணவில்லை’ என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story