இந்துத்வா குறித்த மோகன் பகவத்தின் பேச்சுக்கு சிவசேனா பாராட்டு


இந்துத்வா குறித்த மோகன் பகவத்தின் பேச்சுக்கு சிவசேனா பாராட்டு
x
தினத்தந்தி 28 Oct 2020 6:02 AM IST (Updated: 28 Oct 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

இந்துத்வா குறித்த மோகன் பகவத்தின் பேச்சுக்கு சிவசேனா பாராட்டு தெரிவித்து உள்ளது.

மும்பை, 

நாக்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்.எஸ்.எஸ். தசரா பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத் இந்தியாவில் 130 கோடி மக்களுக்கும் இந்துத்வா பொருந்தும் என கூறியிருந்தார். மேலும் அவர் இந்து கலாசாரமே பன்முகதன்மை உடையது, சில குழுக்கள் சமூகத்தில் வெறுப்பை பரப்பி மக்களிடையே பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்க முயற்சி செய்தவதாக கூறியிருந்தார்.

இந்துத்வா குறித்த மோகன் பகவத்தின் பேச்சுக்கு சிவசேனா பாராட்டு தெரிவித்து உள்ளது. இது குறித்து சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தவறான சிந்தனை

கொரோனா தொற்று காலத்திலும் கோவில்களை திறக்க வேண்டும் என மகிழ்ச்சியாக மணி அடித்த பா.ஜனதா தலைவர்கள் முதலில் கண்டிப்பாக பகவத்தின் பேச்சை கேட்க வேண்டும். சில தரகர்கள் இந்துத்வா கொள்கை அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனவும், பா.ஜனதாவில் இல்லாதவர்கள் இந்துக்களே இல்லை என்ற தவறான சிந்தனையில் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். தலைவர் அவர்களுக்கான இடத்தை காட்டி உள்ளார். பா.ஜனதாவில் உள்ள இந்துத்வா ஆதரவாளர்கள் இந்து-முஸ்லிம்கள் இடையே வன்முறையை அரங்கேற்றி வருகின்றனர். பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் பல மாநிலங்களில் பசுவதை செய்யப்படுகிறது. எனவே இந்துத்வாவில் பா.ஜனதாவின் பசு அரசியல் அடிப்படை ஆதாரமற்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்து உள்ள பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாதய், “சிவசேனா தனது தோல்விகளை மறைக்க இந்துத்வாவை கைவிட்டுள்ளது. எல்லா பிரச்சினைகளிலும் பா.ஜனதாவை விமர்சிக்க வேண்டிய தேவை அந்த கட்சிக்கு உள்ளது” என்றார்.

Next Story