வழக்கை ரத்து செய்ய கோரிய சுஷாந்த் சிங் சகோதரிகளின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் ஐகோர்ட்டில் ரியா மனு
தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி சுஷாந்த் சிங்கின் சகோதரிகள் தாக்கல் செய்து உள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் நடிகை ரியா சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்து உள்ளார்.
மும்பை,
நடிகர் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மீது பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதற்கிடையே சுஷாந்த் சிங் சகோதரிகள் பிரியங்கா மற்றும் மீத்து சிங் ஆகியோர் டெல்லியை சேர்ந்த டாக்டர் தருண் உதவியுடன் போலி மருந்து சீட்டு மூலம் சுஷாந்த் சிங்கிற்கு தடைசெய்யப்பட்ட மருந்தை கொடுத்ததாக நடிகை ரியா சக்கரவர்த்தி மும்பை போலீசில் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகார் குறித்து மும்பை போலீசார் சுஷாந்த் சிங்கின் சகோதரிகள் மற்றும் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சுஷாந்த் சிங்கின் சகோதரிகள் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளனர். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, எம்.எஸ். கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
தள்ளுபடி செய்ய வேண்டும்
இந்தநிலையில் நடிகை ரியா சக்கரவர்த்தி அவரது வக்கீல் மூலம் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய சுஷாந்த்சிங்கின் சகோதரிகள் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அந்த மனுவில், அவர்கள் கொடுத்த மருந்தை சாப்பிட்ட 5 நாட்களில் சுஷாந்த் சிங் உயிரிழந்து உள்ளார். அவரது சகோதரி பிரியங்கா மற்றும் டாக்டர் தருண் குமார் கூறியதன் பேரில் அவர் சட்டவிரோதமாக அந்த மருந்தை பயன்படுத்தி உள்ளார். எனவே அந்த மருந்தால் சுஷாந்திற்கு மரணம் நிகழ்ந்ததா என்பது விசாரிக்கப்பட வேண்டும். அல்லது அந்த மருந்தை சாப்பிட்டதால் அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டதா என்பதும் கண்டறியப்பட வேண்டும். எனவே சுஷாந்த்சிங் சகோதரிகளின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 4-ந் தேதி நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story