அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி


அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 28 Oct 2020 8:26 AM IST (Updated: 28 Oct 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு (2021) தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்றும், இலவசமாக வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு, 

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று, கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

புனேயை சேர்ந்த சேரம் நிறுவனம், ஆஸ்ட்ராஜனிகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச அளவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒத்துழைப்புடன் இது மேற்கொள்ளப்படுகிறது. அந்த தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனை 2 மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. 2 மற்றும் 3-வது கட்ட பரிசோதனையில் தேசிய அளவில் 1,600 பேருக்கு தடுப்பூசி கொடுத்து பரிசோதிக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு (2021) தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நோய் எதிர்ப்பு சக்தி

அந்த நிறுவனத்தினர் 100 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கும் திறன் உள்ளதாக தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி வழங்குவது குறித்து ஒரு தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு, யாருக்கு முதலில் தடுப்பூசியை வழங்குவது என்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும். முதல்கட்டமாக சுகாதாரத்துறையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2-வது கட்டமாக வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை அரசு இலவசமாக வழங்குகிறது. அதேபோல் இந்த தடுப்பூசியையும் இலவசமாக வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இந்த தடுப்பூசியின் விலை எவ்வளவு என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. முதல்கட்ட தடுப்பூசி பரிசோதனையில் 28 நாட்களில் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது.

உண்மை நிலவரம்

2, 3-வது கட்ட பரிசோதனையில் கொரோனா பாதித்தவர்களுக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படும். இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தால் மத்திய அரசுடன் பேசி, கர்நாடகத்தில் தடுப்பூசி வினியோகம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். நான் சுகாதாரத்துறை பொறுப்பை ஏற்ற பிறகு மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதில் சிலர் சந்தேகத்தை கிளப்புகிறார்கள். அரசு புள்ளி விவரங்களை திரித்து வெளியிடுவது இல்லை. உண்மை நிலவரத்தை மட்டுமே மக்களுக்கு தெரிவிக்கிறோம்.

கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியுள்ளது. அடுத்து வரும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர் அதிகமாக வீசும். இந்த நேரத்தில் பொதுமக்கள் மிகுந்த முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story