புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு முதல்-அமைச்சர் அறிவிப்பு


புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2020 3:56 AM GMT (Updated: 28 Oct 2020 3:56 AM GMT)

புதுவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

புதுச்சேரி, 

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புதுவை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெற முடியும்.

புதுவையில் நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் படித்த 94 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதேநேரத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 1,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த 16 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகளில் படித்த 243 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டே நடைமுறை

அரசுப் பள்ளிகளில் படித்த 2 மாணவர்கள் புதுவை பிராந்தியத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள், 11 பேர் மாகி பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். ஏனாம் பிராந்தியத்தில் ஒருவர்கூட தேர்வாகவில்லை. எனவே இந்த ஆண்டே இந்த 10 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் அரசுப் பள்ளிகளுக்கு மறைந்த தலைவர் களின் பெயர்களை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது திருநள்ளாறு பள்ளிக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் சண்முகத்தின் பெயரும், காலாப்பட்டு பெண்கள் பள்ளிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் பரூக் மரைக்காயரின் பெயரும், காரைக்கால் சேத்தூர் பள்ளிக்கு முன்னாள் மேயர் சவுந்தரங்கன் பெயரும், ஏனாம் பள்ளிக்கு வெலகா சுப்பாராவ் பெயரும் சூட்டப்பட உள்ளது.

சமூகநீதி மறுப்பு

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாம் நமது மாநிலத்தில் மாநில இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குகிறோம். அதேபோல் மத்திய அரசின் தொகுப்பிலும் பிற்படுத்தபட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

இடஒதுக்கீட்டில் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசும், மத்திய மருத்துவ கவுன்சிலும் செயல்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story