சென்னையில் கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவ மாணவர் விஷம் குடித்து தற்கொலை


சென்னையில் கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவ மாணவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 28 Oct 2020 4:27 AM GMT (Updated: 2020-10-28T09:57:17+05:30)

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவர் தனியார் ஓட்டல் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டு, பள்ளி, கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் தமிழக அரசால் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக பணியமர்த்தப்பட்டனர்.கொரோனா வார்டில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் 7 நாட்கள் பணி செய்தால், அடுத்த 7 நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு சென்னையில் தனியார் ஓட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொரோனா வார்டில் 7 நாட்கள் பணி முடிந்ததும், அதே ஓட்டல் அறையில் அவர்கள் தங்களை அடுத்த 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்கின்றனர். இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணி செய்து வந்த முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர், அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

லோகேஷ் குமார்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் லோகேஷ் குமார் (வயது 24). இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, அங்கு தற்போது முதுநிலை மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கியிருந்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டில் லோகேஷ் குமார் பணி செய்து வந்தார்.கடைசியாக கடந்த 14-ந் தேதி கொரோனா பணியில் ஈடுபட்டு, பின்னர் அவர் தங்கியிருக்கும் ஓட்டல் அறை எண் 419-ல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு இருந்து வந்தார். கடந்த 25-ந் தேதி லோகேஷ் குமார் அவரது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘கொரோனா வார்டில் பணி செய்து வருவதால், மிகுந்த மன உளைச்சல் உண்டாகிறது’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதையடுத்து நேற்று முன்தினம் லோகேஷின் பெற்றோர், அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் வெகு நேரமாக போனை எடுக்காததால், சந்தேகமடைந்த அவர்கள், ஓட்டல் நிர்வாகத்தை தொடர்புகொண்டு பேசினர். பின்னர் ஓட்டல் ஊழியர்கள் மற்றொரு சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அவர் வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த பாண்டிபஜார் போலீசார் லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், லோகேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மன உளைச்சலில் தான் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story