சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதால் குஷ்பு கைது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக குஷ்பு கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை சார்பில் ரூ.10 கோடியில் 252 நவீன மீன்அங்காடி புதிதாக கட்டப்பட்டு உள்ளன.
இந்த நவீன மீன் அங்காடிகளுக்கான இடஒதுக்கீடு ஆணைகளையும், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 15 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்புள்ள செயற்கைகோள் போனையும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி உதவித்தொகை
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கடலில் எந்த மூலையில் இருந்தாலும் செயற்கைகோள் போனை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்தை உடனடியாக கண்டுபிடித்துவிடலாம். ஒரு செயற்கைகோள் போனின் விலை ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இது 25 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது.
திருவொற்றியூரில் ரூ.250 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 20 மீனவ கிராமங்களைச்சேர்ந்த 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தீபாவளி உதவித்தொகையாக மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், மீனவ கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளவருக்கு ரூ.4 ஆயிரத்து 500-ம் வழங்கப்படுகிறது.
இடஒதுக்கீடு
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலை தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது. இதுபற்றி மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு இனிமேலும் இதுபோல் நடைபெறாமல் தடுக்கப்படும்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சட்டசபையில் வலிமையான மசோதா இயற்றப்பட்டுள்ளது. இது கவர்னரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக்கப்படும். முதல்-அமைச்சரும் கவர்னரை சந்திக்கும் போதெல்லாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இதன்மூலம் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.
இடஒதுக்கீடு விவகாரத்தில் அ.தி.மு.க.வுக்கு புகழ் கிடைக்கக்கூடாது என்பதற்கான வேலைகளில் தி.மு.க. செயல்படுகிறது. தி.மு.க. எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தின் நலன் மட்டுமே அ.தி.மு.க.வினருக்கு முக்கியம்.
குஷ்பு கைது
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டார். பா.ஜ.க. மட்டுமல்ல தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
திருமாவளவன் கைது தொடர்பாக காவல் துறை நடவடிக்கை எடுக்கும். அ.தி.மு.க.வில் எந்த உள்கட்சி பிரச்சினையும் இல்லை. 2021-ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story