சார்ஜர் போட்டு இருந்த செல்போனை எடுத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
மின்சார ஜங்சன் பாக்சில் சார்ஜர் போட்டு இருந்த செல்போனை ஈரமான கையால் எடுத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
பெரம்பூர்,
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகராசா. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள். இவர்களில் 2-வது மகன் சஞ்சய் (வயது 17). 12-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளார். இவரது உறவினரான பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 1-வது தெருவில் தங்கி ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் சென்னை வந்த சஞ்சய், தனது உறவினர் மற்றும் அவரது நண்பர்களுடன் தங்கி, இங்கேயே பழச்சாறு கடையில் வேலை பார்த்து வந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
நேற்று முன்தினம் காலை அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சஞ்சய், செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு குளிக்க சென்றார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. குளியல் அறையில் இருந்த அவர், ஈரமான கையுடன் செல்போனை எடுப்பதற்கு சார்ஜ் போட்டு வைத்திருந்த மின்சார ஜங்ஷன் பாக்சை கையில் எடுத்தார்.
அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ஜங்ஷன் பாக்ஸ் சுவிட்ச்சை ஆப் செய்துவிட்டு பிரகாசுக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து சஞ்சையை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சஞ்சய் மின்சாரம் தாக்கி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சஞ்சயின் உடலை போலீசுக்கு தெரிவிக்காமல் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால் இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார், பலியான சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சயின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story