தென்காசி அருகே பஞ்சாயத்து கிணற்றின் மீது இருந்த கோவில் சுவர் அகற்றம்


தென்காசி அருகே பஞ்சாயத்து கிணற்றின் மீது இருந்த கோவில் சுவர் அகற்றம்
x
தினத்தந்தி 28 Oct 2020 5:55 AM GMT (Updated: 28 Oct 2020 5:55 AM GMT)

தென்காசி அருகே பஞ்சாயத்து கிணற்றின் மீது இருந்த கோவில் சுவர் அகற்றப்பட்டது.

தென்காசி, 

தென்காசி அருகே உள்ள சிவராமபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் கொடிக்குறிச்சி பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணறு உள்ளது. நீண்ட காலமாக இந்த கிணறு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த கிணற்றின் மீது அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நாகம்மன் கோவில் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் நடத்தி பூஜைகளும் செய்து வருகின்றனர்.

பஞ்சாயத்து கிணற்றை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக அதே ஊரைச் சேர்ந்த சுடலைமணி என்பவர் அதிகாரிகளுக்கு புகார் செய்தார். அதிகாரிகள் கோவிலை அகற்ற கூறினர். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகத்தினர், கோவிலை அகற்ற தடை கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஐகோர்ட்டு, கோவில் கிணற்றின் மீது உள்ள ஆக்கிரமிப்பை 2 மாதத்திற்குள் அகற்ற உத்தரவிட்டது. கோர்ட்டு கூறிய காலத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் மீண்டும் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது.

அகற்றம்

பின்னர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்ற கூறினார்கள். பொதுமக்கள் தாங்களாகவே அகற்றி கொள்கிறோம். அதற்கு 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். இந்த நிலையில் அந்த பகுதியில் கிணற்றை காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதற்கிடையே கிணற்றின் மீது இருந்த கோவிலின் ஒரு பகுதி சுவரினை அந்த பகுதி மக்களே அகற்றி விட்டனர். தற்போது கிணறு மீது இருந்த ஆக்கிரமிப்பு கோவில் சுவர் அகற்றப்பட்டது.

Next Story