திருமாவளவனை கைது செய்யக் கோரி தென்காசியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்; 160 பேர் கைது
தென்காசியில் திருமாவளவனை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 160 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பானது.
தென்காசி,
இந்து பெண்களை இழிவுபடுத்தி பேசிய திருமாவளவனை உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று காலை பாரதீய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மகளிரணி தலைவி மகாலட்சுமி தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரி முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட தலைவர் ராமராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் ராஜா, துணை தலைவர் முத்துக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன், வக்கீல் திருமால் வடிவு ஜானகி, மாவட்ட மகளிர் அணி துணை தலைவிகள் காஞ்சனா, மீனா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன், தெற்கு ஒன்றிய துணை தலைவர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போராட்டத்தில் கலந்து கொண்ட 23 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.
தள்ளுமுள்ளு
அப்போது, பா.ஜனதாவினருக்கும், போலீஸ்சாருக்கும் இடையே திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பா.ஜனதா மாவட்ட தலைவர் ராமராஜாவின் காரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மாரியப்பன் என்பவரது செல்போனையும் வாங்கி இருந்தனர். மாலை சுமார் 6 மணி அளவில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் விடுவித்து மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினார்கள்.
அப்போது போலீசார் கைப்பற்றிய காரும், செல்போனும் கொடுக்கப்படவில்லை. இதனால் அங்கிருந்த அனைவரும் காரையும், செல்போனையும் கொடுத்தால்தான் வெளியே செல்வோம் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு செல்போனையும், காரையும் போலீசார் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் வெளியே சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story