சேலம் ஜவ்வரிசிக்கு விரைவில் புவிசார் குறியீடு


சேலம் ஜவ்வரிசிக்கு விரைவில் புவிசார் குறியீடு
x
தினத்தந்தி 28 Oct 2020 9:45 AM GMT (Updated: 28 Oct 2020 9:55 AM GMT)

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெறும் வகையில் சேகோசர்வ் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து சேலம் சேகோசர்வ் தலைவர் என்.தமிழ்மணி கூறியதாவது:-

சேலம்,

சேலம் மாவட்டம் ஜவுளி தொழில், வெள்ளிக்கொலுசு தயாரிப்பு போன்றவற்றிலும் புகழ்பெற்றது. இவை மட்டுமின்றி, ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தியிலும் இந்திய அளவில் சேலம் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்லாந்துக்கு அடுத்தப்படி யாக சேலம் ஜவ்வரிசி சந்தையே மிகப்பெரிய வணிக சந்தையாக திகழ்கிறது. ஜவ்வரிசி தயாரிப்பு தேவையான மரவள்ளிக்கிழங்கு செடிகள் தமிழகத்தில் சுமார் 85 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. அதாவது சேலம் உள்பட 21 மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களில் விளையும் மரவள்ளிக் கிழங்குகள் மூலம் ஆண்டுக்கு 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி 20 லட்சம் மூட்டைகளும், ஸ்டார்ச் மாவு 7 லட்சம் மூட்டைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சேலத்தில் சேகோ ஆலைகள் மரவள்ளிக்கிழங்குகளை வாங்கி ஜவ்வரிசியாகவும், ஸ்டார்ச் மாவாகவும் தயாரிக்கிறது. இவை சேலம் சேகோசர்வ் நிறுவனத்துக்கு கொண்டு வரப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது. மத்திய அரசு கடந்த 1999-ம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது. இதன் காரணமாக, அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு வருகிறது.

அதன்படி, சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெறும் வகையில் சேகோசர்வ் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஜவ்வரிசிக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சேலம் சேகோசர்வ் தலைவர் என்.தமிழ்மணி கூறியதாவது:-

சேகோசர்வ் சார்பாக ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க கோரி மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீட்டால் சேலம் ஜவ்வரிசி சட்ட பாதுகாப்பு கிடைக்கும். இதனால் அரசின் அங்கீகரிக்கப்பட்ட புவிசார் குறியீடு இலச்சினையை பயன்படுத்த முடியும். சேலம் ஜவ்வரிசியை பதிவு செய்யப்பட்ட பின்னர் போலியாக வேறு ஊர்களில் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அவர்களுக்கு கோர்ட்டு மூலம் சிறை தண்டனையும், அபராதமும் பெற்றுத்தர முடியும்.

இதன் மூலம் ஜவ்வரிசி தொழிலையே நம்பியுள்ள மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். இதற்காகத்தான் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவதில் சேகோசர்வ் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.கூடிய விரைவில் சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story