அரியலூரில் பரபரப்பு: பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் முயற்சி - மோதல் ஏற்படும் சூழலால் போலீஸ் குவிப்பு
அரியலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 2 கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்,
அரியலூர் அண்ணா சிலை அருகில் பாரதீய ஜனதா கட்சி பெண்கள் அணி சார்பில் மாவட்ட தலைவர் சுகன்யா தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலும், அவர்கள் கலைந்து செல்லாமல் பேசிக்கொண்டே இருந்ததாக தெரிகிறது.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த வழியாக, ஒரு புகார் கொடுக்க போலீஸ் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து, சொந்த தொகுதிக்கு திருமாவளவன் வர தடையா? என்று கேட்டதோடு, பா.ஜ.க.வினர் இரண்டு மணி நேரமாக போராட்டம் செய்கின்றனர் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் தடையை நீக்க கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டம் செய்ததோடு, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் சமாதானம் செய்து அவர்களை திருப்பி அனுப்பினார்கள். இந்நிலையில் பா.ஜ.க.வினர் பெரியார், அம்பேத்கர் சிலை முன்பு கூடி நின்றதால் போலீசார் சிலையை சுற்றி காவலுக்கு நின்றனர். எந்த நேரமும் இரண்டு கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து 2 கட்சியினரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story