வாடிப்பட்டி அருகே, லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி - ரோந்து பணியின் போது பரிதாபம்


வாடிப்பட்டி அருகே, லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி - ரோந்து பணியின் போது பரிதாபம்
x
தினத்தந்தி 28 Oct 2020 1:30 PM GMT (Updated: 28 Oct 2020 1:21 PM GMT)

வாடிப்பட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

வாடிப்பட்டி, 

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஒத்தவீடு ஊத்துப்பட்டி ஜாங்கிட் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 55). இவர் சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் நெடுஞ்சாலை ரோந்து பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து அவர் இரவில் சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு 11.45 மணி அளவில் வாடிப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே ரோந்து வாகனம் சென்றபோது அங்கு மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

இதை கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ரோந்து வாகனத்தை நிறுத்தி லாரி டிரைவரிடம் விசாரித்தார். அந்த லாரி பழுது காரணமாக நின்று விட்டதாகவும், அதனை சரி செய்து கொண்டிருப்பதாகவும் டிரைவர் தெரிவித்தார். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி மற்றொரு லாரி வந்தது. அந்த லாரி சாலையோரம் நின்ற சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மீது மோதியது.

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து போலீஸ் ரோந்து வாகன டிரைவர் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பழனிசாமியை கைது செய்தனர்.

தகவல் அறிந்த மதுரை போலீஸ் டி.ஐ.ஜி ராஜேந்திரன், சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கிய ராஜ் மற்றும் போலீசார், பலியான சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நாகராஜனுக்கு தமிழ்ச்செல்வி (45) என்ற மனைவியும், யோக ரூபா (18) என்ற மகளும், விஜய் காமன் (14) என்ற மகனும் உள்ளனர். ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர், லாரி மோதி பலியான சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story