ஈரோட்டில் தொழிலாளி கொலை: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொன்றோம் - கைதான 2 வாலிபர்கள் வாக்குமூலம்


ஈரோட்டில் தொழிலாளி கொலை: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொன்றோம் - கைதான 2 வாலிபர்கள் வாக்குமூலம்
x
தினத்தந்தி 28 Oct 2020 1:45 PM GMT (Updated: 28 Oct 2020 2:34 PM GMT)

ஈரோட்டில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 வாலிபர்களும், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொன்தாக போலீசில் வாக்குமூலம் கொடுத்தனர்.

ஈரோடு,

சேலம் மாவட்டம் ஓமலூர் குதிரை குட்டிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் வீரப்பன் (வயது 19). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 1½ மாதமாக ஈரோடு மோளகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது அத்தை செல்லம்மாள் வீட்டில் தங்கியிருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி இரவு வீரப்பன் மோளகவுண்டம்பாளையத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கணபதியின் மகன் திருநாவுக்கரசு (22), அர்ஜூனனின் மகன் சக்திவேல் (24) ஆகியோருக்கு வீரப்பன் கொலையில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

செல்லம்மாள், அவரது கணவர் தங்கராஜ், மகள் ராக்கம்மாள், மருமகன் ராஜா, செல்லம்மாளின் அண்ணன் மகன் வீரப்பன் ஆகியோர் கடந்த 25-ந் தேதி செல்லம்மாளின் வீட்டில் இருந்தனர். அப்போது ராஜாவுடன் வேலை பார்க்கும் நசியனூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கோவிந்தராஜ், அவருடைய தம்பி முனியாண்டி ஆகியோரும் செல்லம்மாளின் வீட்டுக்கு சென்றார்கள். மேலும், நாங்களும் (சக்திவேல், திருநாவுக்கரசு) அங்கு சென்றோம். அப்போது அவர்களுடன் சேர்ந்து நாங்கள் மது அருந்தினோம்.

இந்தநிலையில் செல்லம்மாள் எழுந்து அருகில் உள்ள அறைக்கு தூங்க சென்றார். அப்போது செல்லம்மாளிடம் அவரது மருமகன் ராஜா தவறாக நடக்க முயன்றார் இதைப்பார்த்த செல்லம்மாளின் கணவர் தங்கராஜ் விரைந்து சென்று ராஜாவை கண்டித்து உள்ளார். மேலும், மருமகனிடம் இப்படியா பழகுவது என்று கூறி செல்லம்மாளையும் அவர் தாக்கினார். தனது அத்தையை அடிப்பதை பார்த்த வீரப்பன், தங்கராஜை தட்டிக்கேட்டார். அவர்களுடன் கோவிந்தராஜ், முனியாண்டி ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். மேலும், அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததால் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தாக்குதலில் முனியாண்டிக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

இதைப்பார்த்ததும் வீரப்பன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பிரச்சினை தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த வீரப்பன் அங்கிருந்து தப்பி ஓடியதால், ஆத்திரம் அடைந்த நாங்கள் 2 பேரும் அவரை தொடர்ந்து துரத்தினோம். அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் அவரை மடக்கி பிடித்து தாக்கினோம். பிறகு அங்கிருந்த கல்லை எடுத்து வீரப்பன் மீது வீசினோம். அதில் தலையில் பலத்த காயம் அடைந்த வீரப்பன் அங்கிருந்து உருண்டு கீழே விழுந்தார். அதன்பிறகு குடிபோதையில் இருந்த நாங்கள் அங்கிருந்து சென்றுவிட்டோம். மறுநாள் காலையில் தான் வீரப்பன் உயிரிழந்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கைதான சக்திவேல், திருநாவுக்கரசு ஆகிய 2 பேரையும் போலீசார் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story