மேட்டுப்பாளையத்தில் பயங்கர தீ விபத்து: பழைய இரும்பு மார்க்கெட்டில் கார்கள், டயர்கள் எரிந்து நாசம்

மேட்டுப்பாளையம் பழைய இரும்பு மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கார்கள், டயர்கள் எரிந்து நாசமானது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் சங்கர் நகர் 4- வது வார்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் திப்பு சுல்தான் பழைய இரும்பு மற்றும் வாகன உதிரி பாகங்கள் விற்பனை மார்க்கெட் உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட பழைய இரும்பு விற்பனைக் கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டின் கடைசி பகுதியில் 40 சென்ட் இடத்தில் திறந்தவெளியில் உடைப்பதற்காக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அங்கு நேற்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு வாகனத்தில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியது. பின்னர் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கி மற்ற வாகனங்களுக்கும் மளமளவென்று பரவியது.
இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு அதிகாலை 3.45 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததோடு, புகையும் அதிகமாக இருந்ததால் தீயின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கோவை தெற்கு, அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப் பட்டன.
மேலும் கோவை மாவட்ட உதவி அலுவலர் தவமணி தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பாலசுந்தரம், ரவிச்சந்திரன், ரகுநாதன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள், அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய காலை 7 மணி வரை 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 23 பழைய கார்கள், 1 கிரேன் மற்றும் புதிய, பழைய டயர்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. எரிந்த வாகனங்கள் எலும்புக்கூடு போல் காட்சி அளித்தன. தீ விபத்தில் சேத மதிப்பு ரூ.10 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதை அறிந்த மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி, பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் திலக், கிறிஸ்டோபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story