கரூரில் காதல் விவகாரத்தால் ஆத்திரம்: கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு தந்தை-மகனுக்கு போலீசார் வலைவீச்சு


கரூரில் காதல் விவகாரத்தால் ஆத்திரம்: கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு தந்தை-மகனுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Oct 2020 1:23 AM GMT (Updated: 29 Oct 2020 1:23 AM GMT)

கரூரில் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் கார் டிரைவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர், 

கரூர் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது 27). கார் டிரைவரான இவர், அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரது மகளை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, இந்த காதல் விவகாரம் மணிமாறனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனபாலை, மணிமாறன் கண்டித்துள்ளார். அதில் இருந்தே மணிமாறனுக்கும், தனபாலுவுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கரூர் ரத்தினம் சாலையில் தனபாலுவும், மணிமாறனின் மகளும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதைக்கண்ட மணிமாறன், அவரது மகன் சரண் ஆகியோர் சேர்ந்து காதல் விவகாரம் குறித்து தனபாலுவுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த மணிமாறன், சரண் சேர்ந்து அரிவாளால் தனபாலை தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளனர். இதில் தனபால் கீழே விழுந்து அலறினார்.

தந்தை-மகனுக்கு வலைவீச்சு

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைக்கண்ட மணிமாறன் மற்றும் சரண் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் படுகாயமடைந்த தனபாலை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தனபால் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய தந்தை, மகனை வலைவீசி தேடி வருகிறார். காதல் விவகாரத்தில் கார் டிரைவரை தந்தையும், மகனும் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story