ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கருவாடு மூட்டையுடன் ரூ.75 லட்சம் கஞ்சா கடத்தல் 4 பேர் கைது


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கருவாடு மூட்டையுடன் ரூ.75 லட்சம் கஞ்சா கடத்தல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2020 2:51 AM GMT (Updated: 29 Oct 2020 2:51 AM GMT)

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கருவாடு மூட்டைகளுடன் கடத்தி வந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும் அளவில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில் பரங்கிமலை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையில் போலீசார் பரங்கிமலை, ஆசர்கானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த கருவாடு லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் கருவாடு மூட்டைகளுடன் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

4 பேர் கைது

இது தொடர்பாக லாரி டிரைவரான செங்குன்றத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 36) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி கடத்தி வந்து சென்னை, புறநகர் பகுதி மற்றும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளுக்கு சில்லரை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு வினியோகம் செய்வது தெரிந்தது. போலீசார் பிடிக்கும்போது கஞ்சா நெடி தெரியாமல் இருக்க கருவாடு மூட்டைகளுடன் மறைத்து வைத்து கடத்தியதும் தெரிந்தது. மேலும் அவரிடம் கஞ்சா வாங்க வந்த சோழவரத்தை சேர்ந்த மகேஷ் (29), புழலை சேர்ந்த முரளி (30), திண்டுக்கல் பகுதி கஞ்சா வியாபாரி மகுடிஸ்வரன் (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

ரூ.75 லட்சம் மதிப்பு

அவர்களிடம் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 330 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேருடன், பிடிபட்ட கஞ்சாவை பரங்கிமலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர் தினகரன், பரங்கிமலை போலீஸ் நிலையம் வந்து, கஞ்சா லாரியை மடக்கி பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கினார். அப்போது அவருடன் சென்னை தெற்கு இணை கமிஷனர் பாபு, பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர், கூடுதல் துணை கமிஷனர் கோவிந்தராஜு, உதவி கமிஷனர் ஜீவானந்தம் ஆகியோர் இருந்தனர்.

Next Story