அனுமதியின்றி போராட்டம் பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு


அனுமதியின்றி போராட்டம் பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 Oct 2020 4:14 AM GMT (Updated: 29 Oct 2020 4:14 AM GMT)

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று முன்தினம் பா.ஜ.க. மகளிரணி சார்பில் இந்து பெண்களை திருமாவளவன் எம்.பி. இழிவாக பேசியதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று முன்தினம் பா.ஜ.க. மகளிரணி சார்பில் இந்து பெண்களை திருமாவளவன் எம்.பி. இழிவாக பேசியதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திருமாவளவன் எம்.பி. மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏந்தியவாறு பேரணியாக வந்தனர். இதை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பா.ஜ.க நிர்வாகிகள் ஜெனிலியா, ராஜகுமாரி உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் திருமாவளவனின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story