வாலிபரின் சாவு குறித்து முறையாக விசாரிக்கவில்லை: குமரி போலீஸ் அதிகாரி மீது மேலும் ஒரு புகார்


வாலிபரின் சாவு குறித்து முறையாக விசாரிக்கவில்லை: குமரி போலீஸ் அதிகாரி மீது மேலும் ஒரு புகார்
x
தினத்தந்தி 29 Oct 2020 11:34 AM IST (Updated: 29 Oct 2020 11:34 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரின் சாவு குறித்து முறையாக விசாரிக்கவில்லை என்று குமரி போலீஸ் அதிகாரி மீது மேலும் ஒரு புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மீது கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில், 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பிள்ளையார்குடியிருப்பு மெயின்ரோட்டைச் சேர்ந்த பாக்கியமணி மனைவி வசந்தி. இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு சுனிதா, சுகன்யா என்ற 2 மகள்களும், சுபாஸ் ஆனந்த் என்ற மகனும் இருந்தனர். எனக்கு கணவர் இல்லை. எனது மகன் கடந்த 16-9-2020 அன்று நாகர்கோவிலுக்கு வேலைக்கு வந்தவன், அங்கிருந்து காணாமல் சென்று விட்டான். எனவே நாங்கள் கோட்டார் போலீசில் அன்று இரவு 11 மணிக்கு புகார் கொடுத்தோம். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். எனது மகனையும் தேடி வந்தனர்.

கொலை செய்யப்பட்டாரா?

இந்தநிலையில் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் எனது மகன் மருந்துவாழ்மலையில் இறந்து கிடப்பதாக கூறினார்கள். எனது மகன் காணாமல் போன அன்று முழுவதும் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம் செல்போனில் பேசி இருக்கிறான். அவர்கள் என் மகனை தவறாக பயன்படுத்தி பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும் வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்துள்ளனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டினார்கள் என்று கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம்.

தற்போது வரை அந்த தம்பதி மீது எந்தவித விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் கடந்த 16-ந் தேதி கன்னியாகுமரி போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்து கேட்டோம். அப்போது நாங்கள் யார் மீது புகார் கொடுத்திருந்து இருந்தோமோ அவர்களுக்கு ஆதரவாக பேசி என் மகளை மிரட்டினர். எங்களை அதிகமாக பணம் செலவழித்தால் மட்டுமே புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இல்லையென்றால் 2 மாதங்கள் ஆகும் என கூறினார்கள். மேலும் என் மகன் பிரேத பரிசோதனை அறிக்கையை இன்னும் தரவில்லை. எனது மகன் இறப்புக்கு காரணமான தம்பதியின் உறவினர் ஒருவர் எங்களை போலீசில் புகார் அளிக்கக்கூடாது என மிரட்டினார். எனவே என் மகன் இறப்பு கொலையா? தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பரபரப்பு

இறந்த வாலிபரின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ள போலீஸ் அதிகாரி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் தற்கொலை செய்து கொண்ட சிவராமபெருமாள் வழக்கில் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் உள்ளார்.

சிவராமபெருமாள் எழுதி வைத்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு அந்த போலீஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டியுள்ளார். அந்த விசாரணை தற்போதுதான் தொடங்கி உள்ளது. அதற்குள்ளாக அந்த அதிகாரி மீது மேலும் ஒரு புகார் கூறப்பட்டுள்ளது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story