குமரி மாவட்டத்தில் கிராமப்புற அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை


குமரி மாவட்டத்தில் கிராமப்புற அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2020 12:02 PM IST (Updated: 29 Oct 2020 12:02 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கிராமப்புற அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தலைவர் மெர்லியன்று தாஸ் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில், 

குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

துணைத்தலைவர் சிவகுமார், கவுன்சிலர்கள் செலின்மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஷ்பாபு, ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல், ஜாண்சிலின் விஜிலா, நீலபெருமாள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ராஜசேகர், நடராஜகுமார், நாகேஸ்வரி, சித்ராமேரி, பாலசரஸ்வதி, ஜோசப்பின் சகாய பிரமிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவுன்சிலர்கள் கோரிக்கை

கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்தின் கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான செலவினங்கள் அங்கீகரிக்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத்துறை குறித்தும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஊட்டச்சத்து குறித்தும், சத்துணவு திட்டம் குறித்தும் விவாதித்து ஆய்வு செய்யப்பட்டது. 16-12-2016 அன்று நடந்த கூட்டு தீர்மான எண்-2ல் தேர்வு செய்யப்பட்ட 2 பணிகளும், 15-7-2020 அன்று நடைபெற்ற கூட்ட தீர்மான எண் 15-ல் தேர்வு செய்யப்பட்ட 4 பணிகளும் ரத்து செய்யப்பட்டன. கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மையம் அமைவதற்கு ஆணையிட்ட தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத்துறை தொடர்பான விவாதத்தின்போது கால்நடை மருத்துவமனைகளில் உள்ள மருந்து தட்டுப்பாட்டு பிரச்சினையை நிவர்த்தி செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்டனர். அதேபோல குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் ஊட்டச்சத்து விவாதத்தின்போது கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும், அவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்டனர்.

எடை குறைவான குழந்தைகள்

பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அதிகாரி ஜோசப்பின் சகாய பிரமிளா கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் 1,401 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அவற்றில் 150 அங்கன்வாடி மையங்கள் தனியார் கட்டிடங்களில் இலவசமாகவும், வாடகை கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 6 முதல் 12 மாதம் வரையில் 11 ஆயிரத்து 22 குழந்தைகளும், 12 முதல் 24 மாதம் வரையில் 17 ஆயிரத்து 600 குழந்தைகளும், 24 முதல் 36 மாதம் வரையில் 19 அயிரத்து 250 குழந்தைகளும் உள்ளன. அந்த குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 9 ஆயிரத்து 27 கர்ப்பிணி பெண்களுக்கும், 9 ஆயிரத்து 257 பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் மிகவும் எடை குறைவான குழந்தைகளாக 259 குழந்தைகள் உள்ளன. இது தமிழகத்தின் பிற மாவட்டங்களைவிட குமரி மாவட்டத்தில் மிகவும் குறைவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சொந்த கட்டிடம்

பின்னர் பேசிய மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ் கூறியதாவது:-

வாடகை கட்டிடங்களில் இயங்கும் கிராமப்புற அங்கன்வாடி மையங்கள், அடிப்படை வசதிகள் இல்லாத கிராமப்புற அங்கன்வாடி மையங்கள் குறித்த பட்டியலைக் கொடுத்தால் அவற்றுக்கு மாவட்ட பஞ்சாயத்து மூலம் சொந்த கட்டிடம் கட்டிக் கொடுப்பதற்கும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். 15-வது மானியக்குழுவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1 கோடியே 96 லட்சம் நிதியில் முதல் கட்டமாக ரூ.98 லட்சம் மாவட்ட பஞ்சாயத்துக்கு வந்துள்ளது. இந்த நிதியில் ரூ.60 லட்சத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருக்கும் பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டப்பணிகள், குடிநீர் தொடர்பான பணிகள், சாலைப்பணிகள் போன்றவற்றை செலவிடலாம். அதுதொடர்பான பணிகள் அடுத்த கூட்டத்தில் தேர்வு செய்யப்படும்.

இவ்வாறு மெர்லியன்று தாஸ் கூறினார். 

Next Story