மதுரை பழைய சொக்கநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டிற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு - கண்காணிப்பு கேமரா மூலம் 2 பெண்கள் சிக்கினர்
மதுரை பழைய சொக்கநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டிற்கு வந்த பெண்ணிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறித்த 2 பெண்கள் சிக்கினர்.
மதுரை,
மதுரை சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக பூஜை நேரத்தில் கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. எனவே பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். பூஜை முடிந்த உடன் பக்தர்கள் தரிசனத்திற்கு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது ஒரு பெண், தான் அணிந்திருந்த நகையை காணவில்லை என்று கூச்சலிட்டார். உடனே கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கதவை இழுத்து பூட்டினர். பின்னர் நகையை பறிகொடுத்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் வடக்குமாசி வீதியை சேர்ந்த ஆறுமுகம்மாள் (வயது 55) என்பது தெரிய வந்தது. கோவிலை திறந்து உள்ளே நுழையும்போது தான் அணிந்திருந்த 5 பவுன் நகையை யாரோ ஒருவர் கழுத்தில் பறித்து விட்டார் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து கோவில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் ஒரு சிறுமி கோவிலின் உள்ளே நகை ஒன்று கீழே கிடந்ததாக கொண்டு வந்து கோவில் ஊழியர்களிடம் கொடுத்தார். அந்த நேரத்தில் போலீசாரும் அங்கு வந்தனர்.
அவர்கள் விசாரணை நடத்தி, கோவிலுக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், ஒரு பெண் ஆறுமுகம்மாளின் கழுத்தில் இருந்து நகையை இரும்பு கட்டரை கொண்டு கட் செய்வதும், நகை காணாமல் ஆறுமுகம்மாள் கூச்சல் போட்டதும், கதவை மூடியதால் நகை பறித்த பெண் கீழே நகையை போடுவதும் பதிவாகி இருந்தது. மேலும் கீழே கிடந்த நகையை சிறுமி எடுப்பதும் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கோவிலுக்குள் இருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் வைத்திருந்த மஞ்சள் பையில் இரும்பு கட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தன. மேலும் அவர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினர்.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த 2 பெண்களையும் திலகர்திடல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பக்தர்கள், பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு கதவை மூடியதால் தான் நகை திருடிய பெண்கள் சிக்கினர். எனவே அவர்களை போலீசார் பாராட்டினர்.
Related Tags :
Next Story