சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 29 Oct 2020 1:15 PM GMT (Updated: 29 Oct 2020 1:12 PM GMT)

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பேரையூர்,

பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரதோஷத்தையொட்டி நேற்று காலை பக்தர்கள் வனத்துறை கேட்டிற்கு முன்பு வருகை தந்தனர். இதையடுத்து காலை 6.30 மணி முதல் முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏறினார்கள்.

முதல் நாளான நேற்று பக்தர்கள் மலையேற மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் மலை ஏறுவதற்கு முன்பாக தாணிப்பாறை சோதனை சாவடியில் பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே செல்ல வேண்டும், அருகில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் இறங்கி குளிக்க வேண்டாம், கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இரவில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்துள்ளனர்.

Next Story