திண்டிவனத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை


திண்டிவனத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 29 Oct 2020 7:00 PM IST (Updated: 29 Oct 2020 6:52 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திண்டிவனம்,

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் வசந்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது, பருவமழை தொடங்கி இருப்பதால், நகராட்சி பகுதியில் தண்ணீர் தேங்காமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் கொரொனா தொற்று தடுப்பு பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதில் நகராட்சி பொறியாளர் பவுல் செல்வம், மேலாளர் ஸ்ரீ பிரகாஷ், நகரமைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், துணை தாசில்தார் முருகன், தீயணைப்புத் துறை அலுவலர் லட்சுமணன், மின்வாரிய உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் குரு மற்றும் இதில், அனைத்து வணிகர் சங்க தலைவர் வெங்கடேசன், பி.ஆர்.எஸ். ரங்கமன்னார் செட்டியார் மற்றும் வணிகர் சங்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள், குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள், திருமண மண்டப உரிமையாளர்கள், டாக்டர் விஷ்ணு குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செஞ்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். செஞ்சி தாசில்தார் ராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சுதாகர் வரவேற்றார்.

செஞ்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அறவாழி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு படையினர் ராதாகிருஷ்ணன், முருகன், சசுபதி உள்ளிட்டவர்கள் பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மழை வெள்ளத்தின் போது எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். முடிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் கண்ணன் நன்றி கூறினார்.

மேல்மலையனூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகள் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் நெகருன்னிசா தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைதுறை உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன், அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ஏழுமலை வரவேற்றார்.

மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டு பருவமழை காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கி உள்ளவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பது பற்றி செயல்விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியில் தலைமையிடத்து தாசில்தார் கிருஷ்ணதாஸ், மண்டல துணை தாசில்தார் குபேந்திரன் தேர்தல் பிரிவு தாசில்தார் வெங்கடேசன், சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் செல்வகுமார், வட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், தேவராஜன், வட்டார மேற்பார்வையாளர் புஷ்பநாதன், வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.


Next Story