கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை - தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு
கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினார்கள். அதை கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சரவணம்பட்டி,
தி.மு.க. கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் (வயது 60) உள்ளார். இவருடைய வீடு கோவை காளப்பட்டியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு காரில் பெண் அதிகாரி உள்பட 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பையா கவுண்டர் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது வீட்டில் பையா கவுண்டர் இல்லை. அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஈரோடு சென்றுவிட்டார். அவர் வீட்டில் இல்லை என்பதை அறிந்த அதிகாரிகள், பையா கவுண்டரின் மனைவி மற்றும் குடும்பத்தினரை வெளியே வரச்சொன்னார்கள். அவர்கள் வெளியே வந்ததும், அதிகாரிகள் அவருடைய வீட்டின் கதவை பூட்டினர். உள்ளே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. பின்னர் அவர்கள் அனைவரும் வெளியே காத்து நின்றனர்.
இதற்கிடையே பகல் 1.30 மணியளவில் பையா கவுண்டர் வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு அவரையும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை அதிகாரிகள் உள்ளே அழைத்துச்சென்றனர். அவர்கள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதுபோன்று வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்லவும் விடவில்லை. வீட்டில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டன.
வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் அங்கு திரண்டனர். அவர்கள் யாரையும் வீட்டின் வளாகத்துக்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
அத்துடன் அங்கு அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பையா கவுண்டர் வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
தி.மு.க. மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தியதால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story